சனி, 21 மார்ச், 2015

ஆலயம் சுற்றி வருவோம்

நான்முகன் கோபுரம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை அதிகபட்சம் உத்திரவீதி வரை அனுமதிக்கின்றனர். இது திருவிக்கிரமன் சுற்று ஆகும். நாம் இப்பொழுது தெற்கு உத்திரவீதியில் அமைந்திருக்கும் இக்கோயிலின் பிரதான நுழைவு வாயிலான நான்முகன் கோபுரத்தின் உள்ளே நுழைய இருக்கிறோம். தற்காலத்தில் இந்த நான்முகன் கோபுரமானது ரங்கா ரங்கா கோபுரம்  அல்லது ரங்க வாசல் என பேச்சு வழக்கில் சொல்லப்படுகிறது. இந்த கோபுர வாசல் நகர கோட்டை வாசலாக இருந்தது.

காலணி பாதுகாப்பகம்
இந்த கோபுர நுழைவு வாயிலில் இருந்து செருப்பு அணிதல் கூடாது. கோபுரத்தின் வலதுபுறத்தில் இலவச காலணி பாதுகாப்பகம் உள்ளது. காலணிகளைக் கொடுத்து விட்டு கோபுரத்தின் வழியே கோவிலின் உள்ளே நுழைகின்றோம்.




நான்முகன் மண்டபம்

நாம் இப்பொழுது நான் முகன் மண்டபத்தினை அடைகிறோம் இடது புறமாகச் சென்று வருவோம். வரிசையாக நாத முனிகள் சன்னதி அலங்காரமேடை ரெங்கவிலாச மண்டபம்.
இப்படம் ரங்க விலாச மண்டத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் தெரிவது நான்முகன் மண்டபமும், நான்முகன் கோபுரத்தின் உள்பக்கமும் ஆகும்.





ரெங்கவிலாஸ மண்டபம்
ரெங்கவிலாச மண்டபம் மேலே நாம் அதைச் சுற்றி சிற்பங்களாக (மேற்கிலிருந்து கிழக்காக) லஷ்மிநாராயணன் சுதர்சனர், ரெங்கநாதர் இவருக்கு கீழே நம்மாழ்வார், மதுர கவியாழ்வார் அடுத்து பரமபதநாதன் இவருக்கு கீழே கருடன் ஆண்டாள் அடுத்து ஸ்ரீ ராமர் லஷ்மணர், ஆஞ்சனேயர்  அடுத்து வராகபெருமாள், கீதோபசம் விளக்கும் சிற்பங்கள் மற்றும் ஹயக்ரீவர் சிற்பங்கள் உள்ளன. இவை அனைத்தும் புதியதாகவே காட்சியளிக்கின்றன.


கீதோபதேசம் பகுதியில் சஞ்சயன் உள்ளார். தொலைநோக்கு சக்தியுள்ளவர். இங்கே திருவந்திகாப்பு மண்டபத்தில் கிழக்கு பக்கம் தூணில் வடக்கு நோக்கி கைகூப்பியவண்ணம்  ஒருவர் சிலை உள்ளது.

கம்பராமாயணம்
அருளிய கம்பர்

அதன் கீழே கம்பர் என எழுதியுள்ளது. இது சரியன்று எனசிலர் கூறுகிண்றனர்.  மேற்கே உள் ஆண்டாள் சந்நதி (இத்தலத்தில் மேற்கு வெளிவீதியில் வெளி ஆண்டாள் சந்நதியும் உள்ளது. இங்கு பெருமாள் வருடத்தில் ஒரு நாள் சென்று வருவார்.)







ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி
அடுத்து வேணு கோபாலன் சந்நதி இது யாவரையும் ஈர்க்கும் பேசும் கற்சிற்பங்கள் நிறைந்த கோபுரம். வெளிநாட்டவர் கண்டு களிக்கின்றனர்.





அடுத்து வாகன மண்டபம், இவ்வாகன மண்டபத்தில் அநேக கடவுளர் சிற்பங்களும் லெளகீக சிற்பங்களும் நிறைந்து உள்ளன. பின்புறம் அழகு மிகு சிறந்த வேலைபாடுடன் கூடிய அமிர்த கலச கருடன் சந்நதி இதன் கதவும் தாழிடப்பட்டேயிருக்கும். தெரிந்து திறக்கச் சொல்லி கண்டு சேவிக்கலாம் (பெரிய திருவடியை) காண வேண்டிய ஓர் சந்நதி.

சக்கரத்தாழ்வார்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நதி இங்கு திருமால் அறுகோணத்தின் நடுவே சக்கர வடிவினறாய் எட்டுகரங்களுடன் எழுந்தருளியுள்ளார். இது சுதர்சன சதகத்தில் தெரிவிக்கப்பட்டது. இவரை சுதர்சனன் என்பர். ஒரு சமயம் பிரம்மதேவனுடைய சிரசை கொய்ததின் பாதகத்தை நிவர்த்திக்க சிவன் திருமாலை பேணுவதற்கு சுதர்சன வழிபாட்டை விளக்கி வழிப்படும்படி செயல்பாதகத்தை நிவர்த்திசெய்துகொண்டார்.
இவரை நெறியோடும் முறையோடும் வழிபடுகிறவர்கள் நீண்ட ஆயுளும் உடல் நலமும் நீங்காத செல்வமும் பெறக் கடவர் என சுதர்சன சதகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.இந்த ஷேத்திரம் நம்நாட்டில் உள்ள நவகிரகங்களில் சுக்கிரன் ஷேத்திரம். இங்கே விஜயவல்லித்தாயாரும் உள்ளே இருக்கிறார். பிரதஷணம் வரும் பொழுது திருவரங்க அமுதனார் சந்நதி உள்ளது. இவர் ஆலய பூசைகள் சரிவர நடத்த பேருதவியாக இருந்தவர். சக்கரத்தாழ்வர் பின்புறம் யோகநரசிம்மரைக் காணாலாம், பிரதஷணம் முடிகிறது.


அமர்ந்த யாளியினை
கொண்ட தூண்கள்
இந்த சக்கரதாழ்வார் சந்நதியில் ஹொய்சள தளபதிகள் திருப்பணி செய்துள்ளனர். இதற்கு சான்று சந்நதி முகப்புவாயிலிலும் பின்புறமும் வரிசைக்கு 4 தூண்களாக ஆக எட்டு தூண்கள் வித்யாசமான தூண்களாக பகிர்கின்றன. இந்த தூண்கள் அமர்ந்த நிலையில் உள்ள யாளியின் சிரசில் தாங்குவதாக அமைக்கப்பெற்றுள்ளன. இவ்வாலயதிலுள்ள எல்லா தூண்களும் மாறுபட்டவைகளாக இருக்கின்றன, கூர்ந்து கவனித்தால் தெரியும்.


கார்த்திகை கோபுர வாசல்
அடுத்தது ஆலிநாடன் சுற்று அல்லது திருமங்கைமன்னன் சுற்று வருகிறது. ஆலிநாடன் சுற்றில் உள்ள கார்த்திகை கோபுரவாசல் வழியாக உள்ளே செல்கிறோம்.






கருடாழ்வார் சந்நிதியின் பின்புறம்
கருடாழ்வார் சந்நிதியின் பின்புறத்தினை காண்கிறோம். இப்பொழுது நாம் நிற்கும் இடம் கருடமண்டபம் ஆகும். கோபுரத்தை ஒட்டி இடதுபுறம் வேணுகோபாலன் சந்நதி உள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்கே ஓர் சிறிய  ஆஞ்சநேயர் சந்நதி உள்ளது. ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.




நம்மாழ்வார்,
மதுரகவி ஆழ்வார்
திருமங்கை  ஆழ்வார் சந்நிதிகளின்

நுழைவாயில்
நம்மாழ்வார், 
மதுரகவி ஆழ்வார்
திருமங்கை  ஆழ்வார் சந்நிதிகள்
 என சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது














கருட மண்டபத்தில் இடதுபுறம் நம்மாழ்வர், மதுரகவி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் மூவருக்கும் தனிச் சந்நதி உள்ளன.


சேவித்து விட்டு கம்பீர்ய தோற்றத்துடன் கூடிய கைகூப்பி அமர்ந்த நிலையில் உள்ள கருடன் சந்நதி வருவோம். சந்நிதியின் வாயிலின் இரு மருங்கும் அங்கதன், சுக்ரீவன் (குரங்கு உருவ) சிலைகள் உள்ளன.




கருட மண்டபம்
அழகிய சிற்பங்கள் நிரம்பிய உயர்ந்த தூண்கள் கொண்டது இந்த கருட மண்டபமாகும். கருடமண்டபத்தின் வடக்கு, மேற்கு அடி வரிசையில் விளிம்பில் ராமாயண புராண சிற்பங்களை சிறிய உருவில் கண்டு மகிழலாம். மொத்தத்தில் சிற்பியின் உளிபடாத மண்டபமோ துணோ கோபுரமோ இல்லை எனலாம். எதிரே வாகன பாதுகாப்பு அறைகள், நாம் எதிரேயும் பக்கங்களிலும் கண்களை வீசுகிறோம். சற்றே கருடமண்டபத்தின் உத்தரத்தைப் பார்போமா. சித்திரமாக வரையப்பெற்று அழிந்துள்ளதைக் கண்டு வருந்துகிறோம்.  


ஆர்யபடாள் கோபுரத்தினுள் நுழைகிறோம். இடது பக்கம் பவித்ரோத்சவ மண்டபம். இம்மண்டபத்திற்கு பின்புறம் ஹயக்ரீவர் சன்னதியும், சரஸ்வதி சன்னதியும், தசமூர்த்திகள் சன்னதியும் உள்ளன. இதன் கிழக்கே ஊஞ்சல் மண்டபம். இங்கு பெருமாள் ஊஞ்சல் விழா கண்டருளுவார். இடையில் மேடை. ஆஞ்சநேயர் சன்னதி சமீபத்தில் வெண்பளிங்கு கல் பரவப்பட்டு அழகாக உள்ளது.

எதிரே ஊஞ்சல் மண்டபம். அநேக சிற்பங்கள் நிறைந்த தூண்கள். சிற்பிகளின் கைவண்ணத்தைக் காணலாம். இங்கே ஊஞ்சல் தூணிற்கு வடக்கு பக்கம் உள்ள தூணில் ஓர் சிற்பம். ஒரு பறவைக்கு இரண்டு சிரசுகள்  இவ்விரண்டு அலகுகளிலும் இரண்டு யானைகள், தனது இரண்டு கால் நகங்களிலும் இரண்டு யானைகளை கவ்வி பிடித்துக் கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம்.

{சிற்பியின் கற்பனை நம்மை வியக்க வைக்கிறது.
தற்போதைய உலகின் நிலப்பகுதியில் காணப்படும் மிகப்பெரிய உயிரினம் யானை. அந்த யானையையே உணவாக்கிக் கொள்ளும் மிகப் பெரிய பறவை ஒன்று உள்ளது. அதுவும் இரட்டைத் தலையுடன்}

இந்த இடம் நீங்கிய பிறகுதான், 'பெருமாள்' 'நம்பெருமாள்' என்ற பெயர் பெற்றார் என்று அறியப்படுகிறது.

srirangam moolavar
இங்கே மூலவர் அரங்கனுக்குத் திருமஞ்சனம் கிடையாது. புனுகு சாத்துவது மட்டும் உண்டு. மூலவர் ஆதிசேஷன் படுக்கையில் பள்ளி கொண்டுள்ளார். ஆதிசேஷனின் ஐந்து தலையுடன் குடை பிடித்தது போல் காட்சி தருகிறார்.
                                                                           





புனுகு சாத்துவது என்றால், புனுகு பூனையின் காய்களை நெருப்பில் காய்ச்சி அதனை அதற்கென்று அமைக்கப்பட்ட அம்மியில் நடுவில் இடைவெளி உள்ள குழவியில் வைத்து அமுக்க திரவம் போன்ற புனுகு சட்டம் கிடைக்கிறது. மீண்டும் மீண்டும் செய்து சேகரித்து மூலவருக்கு பிரதி வெள்ளிக்கிழமைகளில் சாத்தப்படுகிறது {பூசப்படுகிறது}.

எதிரே உற்சவர் உபயநாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். மூலவருக்கு அருகே தீர்த்தவாரி பெருமாளும் இருக்கிறார்.

நான்காம் சுற்று/ஆலிநாடன் திருவீதி

ஆர்யபட்டாள் கோபுர வாசல்
பின்னர் தெற்கு நோக்கியுள்ள ஆர்யபடாள் கோபுரத்திற்கு வெளியில் வருகிறோம். ஆர்யபட்டாள் கோபுரத்திலிருந்து இடதுபுறமாக அதாவது மேற்குப் பக்கமாகச் சுற்றினால்தான் தாயார் சன்னதிக்குச் செல்ல வேண்டும். நான்காம் சுற்றான இச்சுற்று ஆலிநாடன் சுற்று/ ஆலிநாடன் திருவீதி எனப்படும். ஆலிநாடன் எனும் பெயர் திருமங்கை மன்னனான திருமங்கை ஆழ்வாரைக் குறிக்கிறது.   மேற்கு மூலையில் திருக்கொட்டாரமும், துலாபாரம் செலுத்துமிடமும் வரும்.


துலாபாரம்
துலாபாரம் செலுத்தும் இடம்
ஆர்யபட்டாள் கோபுர வாசலில் இருந்து மேற்கே சென்றால் துலாபாரம் செலுத்துமிடம் உள்ளது. பக்தர்களால் கோவிலுக்கு காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொள்ளும் பொருட்கள் அளிக்கப்படும் இடம் இதுவாகும்.
துலாபாரம் செலுத்தும் பொருள்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவைகள் மஞ்சள், தங்கம்,வெள்ளி, நாணயங்கள், அரிசி, வெல்லம், பருப்பு வகைகள், பழங்கள், கோதுமை, தானிய வகைகள், கல்கண்டு, கடுகு, நெய், நெல், எண்ணைவகைகள், ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை, மிளகு சீரகம் ஆகியன.


திருக்கொட்டாரம்
திருக்கொட்டாரம்
அடுத்து திருக்கொட்டாரம் எனப்படும் பெருமாளின் பண்டகச்சாலை உள்ளது. இங்கு பெருமாளுக்கு வரும் அரிசி-நெல்லை சேமித்து வைப்பதற்கு ஐங்கோண வடிவமுள்ள ஐந்து செங்கல் குதிர்கள் கட்டப்பட்டுள்ளன. தற்பொது அவை பழுதுபட்ட நிலையில் உள்ளது.


திருக்கொட்டாரத்தின்னுள்ளே பெருமாளுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய பாத அணிகள் {செருப்புகள்} வைக்கப்பட்டுள்ளன.
பெருமாளின் பாத அணிகள் சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று உள்ளதைக் கண்டு வியக்கின்றோம். ஒவ்வொரு செருப்புகளும் சுமார் 2-3 அடி நீள கொண்டுள்ளது.

திருகொட்டாரத்திற்கு அருகிலேயே ஸ்ரீ மஹாலட்சுமி சன்னதி, ஸ்ரீ செங்கமல நாச்சியார், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ ராமர் சன்னதி ஆகியன உள்ளன. உள்ளே சென்று சாமிகளை தரிசித்து விட்டு வெளியே வருகிறோம்.




ஆலிநாடன் திருவீதிச் சுற்றின்
மேற்குப் பிரகாரம்
இங்கிருந்து ஆலிநாடன் திருவீதிச் சுற்றின் மேற்கு பிரகாரம் ஆரம்பிக்கிறது.  இந்த மேற்கு பிரகாரம் மிக நீண்ட மதில் சுவற்களை இரு புறமும் கொண்டுள்ளது. இங்கே நெற்களஞ்சியங்கள், வட்ட வடிவ கட்டிடங்கள் மற்றும் மாட்டுக் கொட்டகையும் உள்ளன.





மேலபட்டாபிராமன்
சன்னதி
இந்த மேற்கு பிரகாரத்தில் நடந்து செல்லும் வழியில் இடது பக்கத்தில் 'மேல பட்டாபிராமன்' சன்னதி வருகிறது.








அதைத் தொடர்ந்து வடமேற்கு மூலையில் மூத்த ஆழ்வார்கள் சன்னதி அதாவது முதல் ஆழ்வார்கள் மூவர் சன்னதி  வருகிறது.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் ஒரே பீடத்தில் சேவை சாதிக்கின்றனர்.








ஸ்ரீ தீர்த்தகரை வாசுதேவப் பெருமாள்
சன்னதி
இந்த மிக நீண்ட மேற்கு பிரகாரத்தின் வடக்கு பக்கத்தில் தீர்த்தக்கரை வாசு தேவப்பெருமாள் சன்னதி உள்ளது. இங்கு ஒரு நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.






தன்வந்திரி சன்னதி
இதற்கு {தீர்த்தக்கரை பெருமாள் சன்னதிக்கு} எதிரே உயர்ந்த இடத்தில் தன்வந்திரி பெருமாள் சன்னதி உள்ளது.



தன்வந்திரி பெருமாள் ஆனவர், ரங்கநாத பெருமாளுக்கே மருத்துவர் ஆவார். தன்வந்திரி பெருமாள் சன்னதியிலிருந்து தினமும் சுக்கு, வெல்லம், மிளகு பெருமானுக்கு அனுப்பப்படுகிறது.  தன்வந்திரிக்கு தனிச்சன்னதி வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே உள்ளது. விஜய நகர கட்டிடக்கலையில் இச்சன்னதி காணப்படுகிறது.

தன்வந்திரி சன்னதியை தாண்டி தாயார் சன்னதிக்குச் செல்லும் வழியில்,  ஐந்து குழி மூன்று வாசல் என்னும் பகுதியை அடைகிறோம்.
அங்கு தாயார் சன்னதிக்கு செல்லும் வழி என வழிகாட்டி வைக்கப்பட்டுள்ளது.





ஐந்து குழி மூன்று வாசல்
இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்து பரமபதவாசலை பார்ப்பது என்பது ஒரு வழக்கமாகும்.







பரமபதவாசல்











லட்சுமி நாராயணப் பெருமாள்
இந்த ஐந்து குழிகளுக்கு எதிரே லஷ்மி நாராயணப் பெருமாளுக்கு  (சிறிய) சன்னதி உள்ளதை காண்கின்றோம்.







லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதிக்கு,  அருகில் உள்ள வாசலைத் தாண்டி வெளியே வருகிறோம். தாயார் சன்னதி முன் மண்டபம் தெரிகிறது. விதானத்தில் அழகிய ஓவியம் தீட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.  இவ்வோவியம் பெருமாளுக்கும் தாயாருக்கும் நிலவிய “பிரணயக்கலகம்” என்பதை விளக்குவதாகும். அதாவது பெருமாள் பங்குனி மாதம் உறையூர் சென்று நாச்சியாருடன் இருந்த விஷயமாக பிரணயக்கலகம்(பிணக்கு) நடந்து, நம்மாழ்வார் சமாதானம் செய்த பின் பெருமாளும் நாச்சியாரும் சேத்தியில்(ஒரு சேர) சேவை சாதிப்பார்கள். பின்னர் பெருமாள் தாயாரை உள்ளே அனுப்பிவிட்டு கோ ரதத்தில் வீதிவலம் கண்டருளுவார். இது பங்குனி மாதம் நடக்கும்.

உள்ளே செல்கிறோம். இடதுபுறம் கலாபசம்ரஷகி தாயார் சிறு சன்னதி சுவற்றில் காணலாம். அடுத்து அஷ்டலஷ்மி மண்டபம். எட்டு லஷ்மிகளின் உருவங்களுடன் கூடியது. இம்மண்டபம் பளிங்கு கல்தூண் மண்டபம். கீழ்த்தளம் விசித்திரமானது. கருங்கல்லில் சிப்பிகளின் அடையாளங்கள் ஆச்சரியமானது.
தாயார்
கர்ப்பக்கிரகம் சென்று மூன்று தாயார்களை சேவிக்கிறோம். முதலில் ரெங்கநாயகி தாயார். பின் ஸ்ரீதேவி, அடுத்து பூதேவி ஆகியோர். கற்பூரஜோதியில் சேவையாகிறது. பட்டர் சுவாமிகள் தீர்த்தம். மஞ்சள் காப்பு சடகோபம் சாதிக்கிறார். மனங்குளிர சேவித்து திருசுற்று வருகிறோம். பங்குனி உத்திர மண்டபம், அடுத்து வசந்த மண்டபம், அடுத்து ஊஞ்சல் மண்டபம் கண்டு, திருவெள்ளரை பெருமாள் சிறு சன்னதி, வில்வ விருஷம், துளசி மாடம், பிருந்தாவனம் சேவித்து வெளியில் வருகிறோம்.

அருள்மிகு ரெங்கநாயகி தாயார் சன்னதி சுற்று பிரகாரத்தில் விதானத்திலும் , சுவர் ஓரங்களிலும் அநேகமாக மறைந்த வண்ண வரை படங்களைக் காணலாம். இவைகளின் அடியில் தெலுங்கு மொழியில் விளக்கம் கொடுத்திருப்பதையும் காணலாம். இவ்வரைபடங்களை தீட்ட அதுவும் விதானத்தில் தீட்ட ஓவியர் எவ்வளவு சிரமத்தை மேற்கொண்டிருப்பார்? தன்னை முழுவதுமாக இறைத்தொண்டில் ஈடுபடுத்தி வரைந்துள்ளார் என்றே கூற வேண்டும்! 

எதிரே கம்பர் பெருமான் ராமாயணம் அரங்கேற்றம் செய்த மண்டபம். கம்பர் 807-885 எனக் குறிக்கிறது ஓர் அறிவிப்பு. இதற்கு வடக்கே தேசிகர் சன்னதி. தெற்கே மேட்டு நரசிம்மர் கோவில். கிழக்கே 1000 கால் மண்டபம் செல்லும் வழி. இடையில் சிம்மதுரையப்பன் சன்னதி. அடுத்து பெரியவாச்சான் பிள்ளை சன்னதி. திரும்பி வந்து வாசுதேவப் பெருமாளைத் தரிசித்து சந்திரபுஷ்கரணியில் இப்புஷ்கரணி வடிவிமாக உள்ளது.
சந்திரபுஷ்கரணி
கை,கால் சுத்தம் செய்து கோதண்டராமர் சந்நதியில் ராமர் லஷ்மனர் சீதாப்பிராட்டியார் ஆஞ்சநேயருடன் தரிசனம். இப்புஷ்கரணிக்கு நீர் மழைகாலத்தில் ரெங்க விமானத்தின் மீது விழும் மழைநீர் முழுவதும் சேர்ந்துவிடும். இங்கு பரமபத நாதர் சன்னதியும் உள்ளது.

வெளியில் வருகிறோம் இடதுபுரம் கீழ் பட்டாபிராமன் சந்நதி  சீனிவாசப் பெருமாள் சந்நதி சமய நூலகம் கண்டு தவுட்டர வாசல் வழியாக 1000 கால் மண்டபம். இந்த 1000 கால் மண்டபம் ஹொய்சாள தளபதிகள்  நிர்மானித்ததாக அறியப்படுகிறது காண செல்கிறோம் வைகுண்ட ஏகாதசி விழா சமயம் தான் பிரவேசம் அனுமதிக்கப்படும். எதிரே சேஷராயர் மண்டபம் காண வேண்டிய ஒன்று வெளிநாட்டவர் கண்டு வியத்தகு அற்புத சிலைகளை கொண்டது. இந்த சேஷராயர் மண்டபத்தில் எழில் மிகு கலைத்திறன் கொண்ட 8 தூண்கள் சிறிது சிறிது சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளன இருப்பினும் காண வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்றாகும். இங்கேயும் ஓர் கோதண்டராமர் சந்நதி உண்டு. மண்டபம் தாண்டி பிள்ளை லோகாச்சாரியார் சந்நதி , அடுத்து பார்த்தசாரதி சந்நதியும் உடையவர் சந்நதியும் உள்ளன. உடையவர் சந்நதிக்கு எதிர்புரம் அதாவது கீழமேல் வளாகத்தில் ஆலய காரியாலயமும் அதன் எதிரே அருங்காட்சியகமும் உள்ளன. இங்கே தான் உடையவர் ஜீவ சமாதியடைந்தார். உடையவரின் சீரிய பணியினால் தான் பூசைகளும் விழாக்களும் ஓழுங்குபடுத்தப்பட்டன என்பர் பெரியோர்( உடையவர் தனி விளக்கம் காண்க)

இவ்வுடையவர் சந்நதி மண்டபம் தான் முதலில் வசந்த மண்டபமாக இருந்திருக்கிறது. இப்பொழுது வசந்த மண்டபம் சக்கரத்தாழ்வார் சந்நதிக்கு வடக்கே அமைந்துள்ள மண்டபம் தான். இம்மண்டபத்திற்கு அகழி உண்டு புஷ்கரணியிலிருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது.கோடைகாலத்தில் பெருமாள் எழுந்தருளுவார். இந்த கோடைகாலத்தில் ரெங்கநாதர் கர்பக்கிரகத்தைச் சுற்றி வெளியில் உண்ணாழியில் தண்ணீர் தினமும் புதிதாக நிரப்பப்படுகிறது. இரவில் வெளியேற்றப்பட்டுவிடும்.

திரும்பவும் கோதண்டராமர் சந்நதிக்கு எதிரே உள்ள மணல்வெளிக்கு வருவோம் மடைப்பள்ளி வெளிச் சுவற்றை ஒட்டி ஸ்ரீபாதம் தனிச்சந்நதி. இங்கே அநேக 4 கால் மண்டபங்கள் உள்ளன. கோடையின் போது பெருமாள் பூச்சாத்தி, நின்று தாங்கிய வண்ணம் சேவை சாதிப்பார் மலர்களால் தயாரிக்கப்பெற்ற மலர்ச்சால்வை போற்றப்பட்டு பன்னீர் தெளிக்கப்பட்டு மலர் மாலையில் நமக்கு தரிசனம் கிடைக்கும்.

அடுத்து கிழக்கே போஜராமர் சந்நதி மற்றும் ஸ்ரீவேணு கோபாலன் சந்நதி மூலையில் திருமழிசை ஆழ்வார் சந்நதி ஆகியவர்களை சேவித்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு அருகே உள்ள ஸ்ரீபண்டாரத்தில் நைவேத்ய உணவு வகைகளை வாங்கி அருந்தலாம் பலவிதமான ஆகாராதிகள், இனிப்பு புளிப்பு சுவையில் அருந்தலாம் உணவு தயாரிப்பில் நல்லெண்ணை மிளகாய் சேர்ப்பதில்லை.

கருட மண்டபத்தினூடே சென்று திருக்கச்சி நம்பிகள், தோன்றமல்லர் நாயுடு தம்பதியர் சந்நதிகளைக் கண்டு மீண்டும் ரெங்க விலாச மண்டபத்தின் கிழக்குபுரம் செல்கிறோம். மேற்குபுரம் கடைகள் கிடையாது. கடைகளில் விளையாட்டு சாமான்கள், சுவாமி படங்கள், நாமக்கட்டி, திருமண், குங்குமம் இன்னும் மற்றவையும் கிடைக்கும் முதலில் வீர ஆஞ்சநேயர் (சுமார் ஒன்பது அடி உயரம்) சந்நதி திருப்பாணாழ்வாருடன் அடுத்து விட்டல்கிருஷ்ணன், வெளியில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சந்நதி இறுதியாக கூரத்தாழ்வார் சந்நதியுடன் சேவை முடிகிறது. நம்ம சுற்று காணலும் முடிகிறது.

இங்கே நடுவில் ஓர் மண்டபம் உள்ளது பெருமாள் உலா முடிந்து வரும் பொழுது இம்மண்டபத்தில் திருவந்திகாப்பு நடைபெறும் முடிந்ததும் நேரடியாக யதாஸ்தானம் சென்று விடுவார். அதாவது கர்ப்பக்கிரகம் சென்றடைந்து விடுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக