சனி, 21 மார்ச், 2015

ஆலயம் சுற்றி வருவோம்

நான்முகன் கோபுரம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை அதிகபட்சம் உத்திரவீதி வரை அனுமதிக்கின்றனர். இது திருவிக்கிரமன் சுற்று ஆகும். நாம் இப்பொழுது தெற்கு உத்திரவீதியில் அமைந்திருக்கும் இக்கோயிலின் பிரதான நுழைவு வாயிலான நான்முகன் கோபுரத்தின் உள்ளே நுழைய இருக்கிறோம். தற்காலத்தில் இந்த நான்முகன் கோபுரமானது ரங்கா ரங்கா கோபுரம்  அல்லது ரங்க வாசல் என பேச்சு வழக்கில் சொல்லப்படுகிறது. இந்த கோபுர வாசல் நகர கோட்டை வாசலாக இருந்தது.

காலணி பாதுகாப்பகம்
இந்த கோபுர நுழைவு வாயிலில் இருந்து செருப்பு அணிதல் கூடாது. கோபுரத்தின் வலதுபுறத்தில் இலவச காலணி பாதுகாப்பகம் உள்ளது. காலணிகளைக் கொடுத்து விட்டு கோபுரத்தின் வழியே கோவிலின் உள்ளே நுழைகின்றோம்.




நான்முகன் மண்டபம்

நாம் இப்பொழுது நான் முகன் மண்டபத்தினை அடைகிறோம் இடது புறமாகச் சென்று வருவோம். வரிசையாக நாத முனிகள் சன்னதி அலங்காரமேடை ரெங்கவிலாச மண்டபம்.
இப்படம் ரங்க விலாச மண்டத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் தெரிவது நான்முகன் மண்டபமும், நான்முகன் கோபுரத்தின் உள்பக்கமும் ஆகும்.





ரெங்கவிலாஸ மண்டபம்
ரெங்கவிலாச மண்டபம் மேலே நாம் அதைச் சுற்றி சிற்பங்களாக (மேற்கிலிருந்து கிழக்காக) லஷ்மிநாராயணன் சுதர்சனர், ரெங்கநாதர் இவருக்கு கீழே நம்மாழ்வார், மதுர கவியாழ்வார் அடுத்து பரமபதநாதன் இவருக்கு கீழே கருடன் ஆண்டாள் அடுத்து ஸ்ரீ ராமர் லஷ்மணர், ஆஞ்சனேயர்  அடுத்து வராகபெருமாள், கீதோபசம் விளக்கும் சிற்பங்கள் மற்றும் ஹயக்ரீவர் சிற்பங்கள் உள்ளன. இவை அனைத்தும் புதியதாகவே காட்சியளிக்கின்றன.


கீதோபதேசம் பகுதியில் சஞ்சயன் உள்ளார். தொலைநோக்கு சக்தியுள்ளவர். இங்கே திருவந்திகாப்பு மண்டபத்தில் கிழக்கு பக்கம் தூணில் வடக்கு நோக்கி கைகூப்பியவண்ணம்  ஒருவர் சிலை உள்ளது.

கம்பராமாயணம்
அருளிய கம்பர்

அதன் கீழே கம்பர் என எழுதியுள்ளது. இது சரியன்று எனசிலர் கூறுகிண்றனர்.  மேற்கே உள் ஆண்டாள் சந்நதி (இத்தலத்தில் மேற்கு வெளிவீதியில் வெளி ஆண்டாள் சந்நதியும் உள்ளது. இங்கு பெருமாள் வருடத்தில் ஒரு நாள் சென்று வருவார்.)







ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி
அடுத்து வேணு கோபாலன் சந்நதி இது யாவரையும் ஈர்க்கும் பேசும் கற்சிற்பங்கள் நிறைந்த கோபுரம். வெளிநாட்டவர் கண்டு களிக்கின்றனர்.





அடுத்து வாகன மண்டபம், இவ்வாகன மண்டபத்தில் அநேக கடவுளர் சிற்பங்களும் லெளகீக சிற்பங்களும் நிறைந்து உள்ளன. பின்புறம் அழகு மிகு சிறந்த வேலைபாடுடன் கூடிய அமிர்த கலச கருடன் சந்நதி இதன் கதவும் தாழிடப்பட்டேயிருக்கும். தெரிந்து திறக்கச் சொல்லி கண்டு சேவிக்கலாம் (பெரிய திருவடியை) காண வேண்டிய ஓர் சந்நதி.

சக்கரத்தாழ்வார்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நதி இங்கு திருமால் அறுகோணத்தின் நடுவே சக்கர வடிவினறாய் எட்டுகரங்களுடன் எழுந்தருளியுள்ளார். இது சுதர்சன சதகத்தில் தெரிவிக்கப்பட்டது. இவரை சுதர்சனன் என்பர். ஒரு சமயம் பிரம்மதேவனுடைய சிரசை கொய்ததின் பாதகத்தை நிவர்த்திக்க சிவன் திருமாலை பேணுவதற்கு சுதர்சன வழிபாட்டை விளக்கி வழிப்படும்படி செயல்பாதகத்தை நிவர்த்திசெய்துகொண்டார்.
இவரை நெறியோடும் முறையோடும் வழிபடுகிறவர்கள் நீண்ட ஆயுளும் உடல் நலமும் நீங்காத செல்வமும் பெறக் கடவர் என சுதர்சன சதகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.இந்த ஷேத்திரம் நம்நாட்டில் உள்ள நவகிரகங்களில் சுக்கிரன் ஷேத்திரம். இங்கே விஜயவல்லித்தாயாரும் உள்ளே இருக்கிறார். பிரதஷணம் வரும் பொழுது திருவரங்க அமுதனார் சந்நதி உள்ளது. இவர் ஆலய பூசைகள் சரிவர நடத்த பேருதவியாக இருந்தவர். சக்கரத்தாழ்வர் பின்புறம் யோகநரசிம்மரைக் காணாலாம், பிரதஷணம் முடிகிறது.


அமர்ந்த யாளியினை
கொண்ட தூண்கள்
இந்த சக்கரதாழ்வார் சந்நதியில் ஹொய்சள தளபதிகள் திருப்பணி செய்துள்ளனர். இதற்கு சான்று சந்நதி முகப்புவாயிலிலும் பின்புறமும் வரிசைக்கு 4 தூண்களாக ஆக எட்டு தூண்கள் வித்யாசமான தூண்களாக பகிர்கின்றன. இந்த தூண்கள் அமர்ந்த நிலையில் உள்ள யாளியின் சிரசில் தாங்குவதாக அமைக்கப்பெற்றுள்ளன. இவ்வாலயதிலுள்ள எல்லா தூண்களும் மாறுபட்டவைகளாக இருக்கின்றன, கூர்ந்து கவனித்தால் தெரியும்.


கார்த்திகை கோபுர வாசல்
அடுத்தது ஆலிநாடன் சுற்று அல்லது திருமங்கைமன்னன் சுற்று வருகிறது. ஆலிநாடன் சுற்றில் உள்ள கார்த்திகை கோபுரவாசல் வழியாக உள்ளே செல்கிறோம்.






கருடாழ்வார் சந்நிதியின் பின்புறம்
கருடாழ்வார் சந்நிதியின் பின்புறத்தினை காண்கிறோம். இப்பொழுது நாம் நிற்கும் இடம் கருடமண்டபம் ஆகும். கோபுரத்தை ஒட்டி இடதுபுறம் வேணுகோபாலன் சந்நதி உள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்கே ஓர் சிறிய  ஆஞ்சநேயர் சந்நதி உள்ளது. ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.




நம்மாழ்வார்,
மதுரகவி ஆழ்வார்
திருமங்கை  ஆழ்வார் சந்நிதிகளின்

நுழைவாயில்
நம்மாழ்வார், 
மதுரகவி ஆழ்வார்
திருமங்கை  ஆழ்வார் சந்நிதிகள்
 என சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது














கருட மண்டபத்தில் இடதுபுறம் நம்மாழ்வர், மதுரகவி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் மூவருக்கும் தனிச் சந்நதி உள்ளன.


சேவித்து விட்டு கம்பீர்ய தோற்றத்துடன் கூடிய கைகூப்பி அமர்ந்த நிலையில் உள்ள கருடன் சந்நதி வருவோம். சந்நிதியின் வாயிலின் இரு மருங்கும் அங்கதன், சுக்ரீவன் (குரங்கு உருவ) சிலைகள் உள்ளன.




கருட மண்டபம்
அழகிய சிற்பங்கள் நிரம்பிய உயர்ந்த தூண்கள் கொண்டது இந்த கருட மண்டபமாகும். கருடமண்டபத்தின் வடக்கு, மேற்கு அடி வரிசையில் விளிம்பில் ராமாயண புராண சிற்பங்களை சிறிய உருவில் கண்டு மகிழலாம். மொத்தத்தில் சிற்பியின் உளிபடாத மண்டபமோ துணோ கோபுரமோ இல்லை எனலாம். எதிரே வாகன பாதுகாப்பு அறைகள், நாம் எதிரேயும் பக்கங்களிலும் கண்களை வீசுகிறோம். சற்றே கருடமண்டபத்தின் உத்தரத்தைப் பார்போமா. சித்திரமாக வரையப்பெற்று அழிந்துள்ளதைக் கண்டு வருந்துகிறோம்.  


ஆர்யபடாள் கோபுரத்தினுள் நுழைகிறோம். இடது பக்கம் பவித்ரோத்சவ மண்டபம். இம்மண்டபத்திற்கு பின்புறம் ஹயக்ரீவர் சன்னதியும், சரஸ்வதி சன்னதியும், தசமூர்த்திகள் சன்னதியும் உள்ளன. இதன் கிழக்கே ஊஞ்சல் மண்டபம். இங்கு பெருமாள் ஊஞ்சல் விழா கண்டருளுவார். இடையில் மேடை. ஆஞ்சநேயர் சன்னதி சமீபத்தில் வெண்பளிங்கு கல் பரவப்பட்டு அழகாக உள்ளது.

எதிரே ஊஞ்சல் மண்டபம். அநேக சிற்பங்கள் நிறைந்த தூண்கள். சிற்பிகளின் கைவண்ணத்தைக் காணலாம். இங்கே ஊஞ்சல் தூணிற்கு வடக்கு பக்கம் உள்ள தூணில் ஓர் சிற்பம். ஒரு பறவைக்கு இரண்டு சிரசுகள்  இவ்விரண்டு அலகுகளிலும் இரண்டு யானைகள், தனது இரண்டு கால் நகங்களிலும் இரண்டு யானைகளை கவ்வி பிடித்துக் கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம்.

{சிற்பியின் கற்பனை நம்மை வியக்க வைக்கிறது.
தற்போதைய உலகின் நிலப்பகுதியில் காணப்படும் மிகப்பெரிய உயிரினம் யானை. அந்த யானையையே உணவாக்கிக் கொள்ளும் மிகப் பெரிய பறவை ஒன்று உள்ளது. அதுவும் இரட்டைத் தலையுடன்}

இந்த இடம் நீங்கிய பிறகுதான், 'பெருமாள்' 'நம்பெருமாள்' என்ற பெயர் பெற்றார் என்று அறியப்படுகிறது.

srirangam moolavar
இங்கே மூலவர் அரங்கனுக்குத் திருமஞ்சனம் கிடையாது. புனுகு சாத்துவது மட்டும் உண்டு. மூலவர் ஆதிசேஷன் படுக்கையில் பள்ளி கொண்டுள்ளார். ஆதிசேஷனின் ஐந்து தலையுடன் குடை பிடித்தது போல் காட்சி தருகிறார்.
                                                                           





புனுகு சாத்துவது என்றால், புனுகு பூனையின் காய்களை நெருப்பில் காய்ச்சி அதனை அதற்கென்று அமைக்கப்பட்ட அம்மியில் நடுவில் இடைவெளி உள்ள குழவியில் வைத்து அமுக்க திரவம் போன்ற புனுகு சட்டம் கிடைக்கிறது. மீண்டும் மீண்டும் செய்து சேகரித்து மூலவருக்கு பிரதி வெள்ளிக்கிழமைகளில் சாத்தப்படுகிறது {பூசப்படுகிறது}.

எதிரே உற்சவர் உபயநாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். மூலவருக்கு அருகே தீர்த்தவாரி பெருமாளும் இருக்கிறார்.

நான்காம் சுற்று/ஆலிநாடன் திருவீதி

ஆர்யபட்டாள் கோபுர வாசல்
பின்னர் தெற்கு நோக்கியுள்ள ஆர்யபடாள் கோபுரத்திற்கு வெளியில் வருகிறோம். ஆர்யபட்டாள் கோபுரத்திலிருந்து இடதுபுறமாக அதாவது மேற்குப் பக்கமாகச் சுற்றினால்தான் தாயார் சன்னதிக்குச் செல்ல வேண்டும். நான்காம் சுற்றான இச்சுற்று ஆலிநாடன் சுற்று/ ஆலிநாடன் திருவீதி எனப்படும். ஆலிநாடன் எனும் பெயர் திருமங்கை மன்னனான திருமங்கை ஆழ்வாரைக் குறிக்கிறது.   மேற்கு மூலையில் திருக்கொட்டாரமும், துலாபாரம் செலுத்துமிடமும் வரும்.


துலாபாரம்
துலாபாரம் செலுத்தும் இடம்
ஆர்யபட்டாள் கோபுர வாசலில் இருந்து மேற்கே சென்றால் துலாபாரம் செலுத்துமிடம் உள்ளது. பக்தர்களால் கோவிலுக்கு காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொள்ளும் பொருட்கள் அளிக்கப்படும் இடம் இதுவாகும்.
துலாபாரம் செலுத்தும் பொருள்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவைகள் மஞ்சள், தங்கம்,வெள்ளி, நாணயங்கள், அரிசி, வெல்லம், பருப்பு வகைகள், பழங்கள், கோதுமை, தானிய வகைகள், கல்கண்டு, கடுகு, நெய், நெல், எண்ணைவகைகள், ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை, மிளகு சீரகம் ஆகியன.


திருக்கொட்டாரம்
திருக்கொட்டாரம்
அடுத்து திருக்கொட்டாரம் எனப்படும் பெருமாளின் பண்டகச்சாலை உள்ளது. இங்கு பெருமாளுக்கு வரும் அரிசி-நெல்லை சேமித்து வைப்பதற்கு ஐங்கோண வடிவமுள்ள ஐந்து செங்கல் குதிர்கள் கட்டப்பட்டுள்ளன. தற்பொது அவை பழுதுபட்ட நிலையில் உள்ளது.


திருக்கொட்டாரத்தின்னுள்ளே பெருமாளுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய பாத அணிகள் {செருப்புகள்} வைக்கப்பட்டுள்ளன.
பெருமாளின் பாத அணிகள் சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று உள்ளதைக் கண்டு வியக்கின்றோம். ஒவ்வொரு செருப்புகளும் சுமார் 2-3 அடி நீள கொண்டுள்ளது.

திருகொட்டாரத்திற்கு அருகிலேயே ஸ்ரீ மஹாலட்சுமி சன்னதி, ஸ்ரீ செங்கமல நாச்சியார், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ ராமர் சன்னதி ஆகியன உள்ளன. உள்ளே சென்று சாமிகளை தரிசித்து விட்டு வெளியே வருகிறோம்.




ஆலிநாடன் திருவீதிச் சுற்றின்
மேற்குப் பிரகாரம்
இங்கிருந்து ஆலிநாடன் திருவீதிச் சுற்றின் மேற்கு பிரகாரம் ஆரம்பிக்கிறது.  இந்த மேற்கு பிரகாரம் மிக நீண்ட மதில் சுவற்களை இரு புறமும் கொண்டுள்ளது. இங்கே நெற்களஞ்சியங்கள், வட்ட வடிவ கட்டிடங்கள் மற்றும் மாட்டுக் கொட்டகையும் உள்ளன.





மேலபட்டாபிராமன்
சன்னதி
இந்த மேற்கு பிரகாரத்தில் நடந்து செல்லும் வழியில் இடது பக்கத்தில் 'மேல பட்டாபிராமன்' சன்னதி வருகிறது.








அதைத் தொடர்ந்து வடமேற்கு மூலையில் மூத்த ஆழ்வார்கள் சன்னதி அதாவது முதல் ஆழ்வார்கள் மூவர் சன்னதி  வருகிறது.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் ஒரே பீடத்தில் சேவை சாதிக்கின்றனர்.








ஸ்ரீ தீர்த்தகரை வாசுதேவப் பெருமாள்
சன்னதி
இந்த மிக நீண்ட மேற்கு பிரகாரத்தின் வடக்கு பக்கத்தில் தீர்த்தக்கரை வாசு தேவப்பெருமாள் சன்னதி உள்ளது. இங்கு ஒரு நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.






தன்வந்திரி சன்னதி
இதற்கு {தீர்த்தக்கரை பெருமாள் சன்னதிக்கு} எதிரே உயர்ந்த இடத்தில் தன்வந்திரி பெருமாள் சன்னதி உள்ளது.



தன்வந்திரி பெருமாள் ஆனவர், ரங்கநாத பெருமாளுக்கே மருத்துவர் ஆவார். தன்வந்திரி பெருமாள் சன்னதியிலிருந்து தினமும் சுக்கு, வெல்லம், மிளகு பெருமானுக்கு அனுப்பப்படுகிறது.  தன்வந்திரிக்கு தனிச்சன்னதி வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே உள்ளது. விஜய நகர கட்டிடக்கலையில் இச்சன்னதி காணப்படுகிறது.

தன்வந்திரி சன்னதியை தாண்டி தாயார் சன்னதிக்குச் செல்லும் வழியில்,  ஐந்து குழி மூன்று வாசல் என்னும் பகுதியை அடைகிறோம்.
அங்கு தாயார் சன்னதிக்கு செல்லும் வழி என வழிகாட்டி வைக்கப்பட்டுள்ளது.





ஐந்து குழி மூன்று வாசல்
இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்து பரமபதவாசலை பார்ப்பது என்பது ஒரு வழக்கமாகும்.







பரமபதவாசல்











லட்சுமி நாராயணப் பெருமாள்
இந்த ஐந்து குழிகளுக்கு எதிரே லஷ்மி நாராயணப் பெருமாளுக்கு  (சிறிய) சன்னதி உள்ளதை காண்கின்றோம்.







லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதிக்கு,  அருகில் உள்ள வாசலைத் தாண்டி வெளியே வருகிறோம். தாயார் சன்னதி முன் மண்டபம் தெரிகிறது. விதானத்தில் அழகிய ஓவியம் தீட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.  இவ்வோவியம் பெருமாளுக்கும் தாயாருக்கும் நிலவிய “பிரணயக்கலகம்” என்பதை விளக்குவதாகும். அதாவது பெருமாள் பங்குனி மாதம் உறையூர் சென்று நாச்சியாருடன் இருந்த விஷயமாக பிரணயக்கலகம்(பிணக்கு) நடந்து, நம்மாழ்வார் சமாதானம் செய்த பின் பெருமாளும் நாச்சியாரும் சேத்தியில்(ஒரு சேர) சேவை சாதிப்பார்கள். பின்னர் பெருமாள் தாயாரை உள்ளே அனுப்பிவிட்டு கோ ரதத்தில் வீதிவலம் கண்டருளுவார். இது பங்குனி மாதம் நடக்கும்.

உள்ளே செல்கிறோம். இடதுபுறம் கலாபசம்ரஷகி தாயார் சிறு சன்னதி சுவற்றில் காணலாம். அடுத்து அஷ்டலஷ்மி மண்டபம். எட்டு லஷ்மிகளின் உருவங்களுடன் கூடியது. இம்மண்டபம் பளிங்கு கல்தூண் மண்டபம். கீழ்த்தளம் விசித்திரமானது. கருங்கல்லில் சிப்பிகளின் அடையாளங்கள் ஆச்சரியமானது.
தாயார்
கர்ப்பக்கிரகம் சென்று மூன்று தாயார்களை சேவிக்கிறோம். முதலில் ரெங்கநாயகி தாயார். பின் ஸ்ரீதேவி, அடுத்து பூதேவி ஆகியோர். கற்பூரஜோதியில் சேவையாகிறது. பட்டர் சுவாமிகள் தீர்த்தம். மஞ்சள் காப்பு சடகோபம் சாதிக்கிறார். மனங்குளிர சேவித்து திருசுற்று வருகிறோம். பங்குனி உத்திர மண்டபம், அடுத்து வசந்த மண்டபம், அடுத்து ஊஞ்சல் மண்டபம் கண்டு, திருவெள்ளரை பெருமாள் சிறு சன்னதி, வில்வ விருஷம், துளசி மாடம், பிருந்தாவனம் சேவித்து வெளியில் வருகிறோம்.

அருள்மிகு ரெங்கநாயகி தாயார் சன்னதி சுற்று பிரகாரத்தில் விதானத்திலும் , சுவர் ஓரங்களிலும் அநேகமாக மறைந்த வண்ண வரை படங்களைக் காணலாம். இவைகளின் அடியில் தெலுங்கு மொழியில் விளக்கம் கொடுத்திருப்பதையும் காணலாம். இவ்வரைபடங்களை தீட்ட அதுவும் விதானத்தில் தீட்ட ஓவியர் எவ்வளவு சிரமத்தை மேற்கொண்டிருப்பார்? தன்னை முழுவதுமாக இறைத்தொண்டில் ஈடுபடுத்தி வரைந்துள்ளார் என்றே கூற வேண்டும்! 

எதிரே கம்பர் பெருமான் ராமாயணம் அரங்கேற்றம் செய்த மண்டபம். கம்பர் 807-885 எனக் குறிக்கிறது ஓர் அறிவிப்பு. இதற்கு வடக்கே தேசிகர் சன்னதி. தெற்கே மேட்டு நரசிம்மர் கோவில். கிழக்கே 1000 கால் மண்டபம் செல்லும் வழி. இடையில் சிம்மதுரையப்பன் சன்னதி. அடுத்து பெரியவாச்சான் பிள்ளை சன்னதி. திரும்பி வந்து வாசுதேவப் பெருமாளைத் தரிசித்து சந்திரபுஷ்கரணியில் இப்புஷ்கரணி வடிவிமாக உள்ளது.
சந்திரபுஷ்கரணி
கை,கால் சுத்தம் செய்து கோதண்டராமர் சந்நதியில் ராமர் லஷ்மனர் சீதாப்பிராட்டியார் ஆஞ்சநேயருடன் தரிசனம். இப்புஷ்கரணிக்கு நீர் மழைகாலத்தில் ரெங்க விமானத்தின் மீது விழும் மழைநீர் முழுவதும் சேர்ந்துவிடும். இங்கு பரமபத நாதர் சன்னதியும் உள்ளது.

வெளியில் வருகிறோம் இடதுபுரம் கீழ் பட்டாபிராமன் சந்நதி  சீனிவாசப் பெருமாள் சந்நதி சமய நூலகம் கண்டு தவுட்டர வாசல் வழியாக 1000 கால் மண்டபம். இந்த 1000 கால் மண்டபம் ஹொய்சாள தளபதிகள்  நிர்மானித்ததாக அறியப்படுகிறது காண செல்கிறோம் வைகுண்ட ஏகாதசி விழா சமயம் தான் பிரவேசம் அனுமதிக்கப்படும். எதிரே சேஷராயர் மண்டபம் காண வேண்டிய ஒன்று வெளிநாட்டவர் கண்டு வியத்தகு அற்புத சிலைகளை கொண்டது. இந்த சேஷராயர் மண்டபத்தில் எழில் மிகு கலைத்திறன் கொண்ட 8 தூண்கள் சிறிது சிறிது சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளன இருப்பினும் காண வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்றாகும். இங்கேயும் ஓர் கோதண்டராமர் சந்நதி உண்டு. மண்டபம் தாண்டி பிள்ளை லோகாச்சாரியார் சந்நதி , அடுத்து பார்த்தசாரதி சந்நதியும் உடையவர் சந்நதியும் உள்ளன. உடையவர் சந்நதிக்கு எதிர்புரம் அதாவது கீழமேல் வளாகத்தில் ஆலய காரியாலயமும் அதன் எதிரே அருங்காட்சியகமும் உள்ளன. இங்கே தான் உடையவர் ஜீவ சமாதியடைந்தார். உடையவரின் சீரிய பணியினால் தான் பூசைகளும் விழாக்களும் ஓழுங்குபடுத்தப்பட்டன என்பர் பெரியோர்( உடையவர் தனி விளக்கம் காண்க)

இவ்வுடையவர் சந்நதி மண்டபம் தான் முதலில் வசந்த மண்டபமாக இருந்திருக்கிறது. இப்பொழுது வசந்த மண்டபம் சக்கரத்தாழ்வார் சந்நதிக்கு வடக்கே அமைந்துள்ள மண்டபம் தான். இம்மண்டபத்திற்கு அகழி உண்டு புஷ்கரணியிலிருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது.கோடைகாலத்தில் பெருமாள் எழுந்தருளுவார். இந்த கோடைகாலத்தில் ரெங்கநாதர் கர்பக்கிரகத்தைச் சுற்றி வெளியில் உண்ணாழியில் தண்ணீர் தினமும் புதிதாக நிரப்பப்படுகிறது. இரவில் வெளியேற்றப்பட்டுவிடும்.

திரும்பவும் கோதண்டராமர் சந்நதிக்கு எதிரே உள்ள மணல்வெளிக்கு வருவோம் மடைப்பள்ளி வெளிச் சுவற்றை ஒட்டி ஸ்ரீபாதம் தனிச்சந்நதி. இங்கே அநேக 4 கால் மண்டபங்கள் உள்ளன. கோடையின் போது பெருமாள் பூச்சாத்தி, நின்று தாங்கிய வண்ணம் சேவை சாதிப்பார் மலர்களால் தயாரிக்கப்பெற்ற மலர்ச்சால்வை போற்றப்பட்டு பன்னீர் தெளிக்கப்பட்டு மலர் மாலையில் நமக்கு தரிசனம் கிடைக்கும்.

அடுத்து கிழக்கே போஜராமர் சந்நதி மற்றும் ஸ்ரீவேணு கோபாலன் சந்நதி மூலையில் திருமழிசை ஆழ்வார் சந்நதி ஆகியவர்களை சேவித்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு அருகே உள்ள ஸ்ரீபண்டாரத்தில் நைவேத்ய உணவு வகைகளை வாங்கி அருந்தலாம் பலவிதமான ஆகாராதிகள், இனிப்பு புளிப்பு சுவையில் அருந்தலாம் உணவு தயாரிப்பில் நல்லெண்ணை மிளகாய் சேர்ப்பதில்லை.

கருட மண்டபத்தினூடே சென்று திருக்கச்சி நம்பிகள், தோன்றமல்லர் நாயுடு தம்பதியர் சந்நதிகளைக் கண்டு மீண்டும் ரெங்க விலாச மண்டபத்தின் கிழக்குபுரம் செல்கிறோம். மேற்குபுரம் கடைகள் கிடையாது. கடைகளில் விளையாட்டு சாமான்கள், சுவாமி படங்கள், நாமக்கட்டி, திருமண், குங்குமம் இன்னும் மற்றவையும் கிடைக்கும் முதலில் வீர ஆஞ்சநேயர் (சுமார் ஒன்பது அடி உயரம்) சந்நதி திருப்பாணாழ்வாருடன் அடுத்து விட்டல்கிருஷ்ணன், வெளியில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சந்நதி இறுதியாக கூரத்தாழ்வார் சந்நதியுடன் சேவை முடிகிறது. நம்ம சுற்று காணலும் முடிகிறது.

இங்கே நடுவில் ஓர் மண்டபம் உள்ளது பெருமாள் உலா முடிந்து வரும் பொழுது இம்மண்டபத்தில் திருவந்திகாப்பு நடைபெறும் முடிந்ததும் நேரடியாக யதாஸ்தானம் சென்று விடுவார். அதாவது கர்ப்பக்கிரகம் சென்றடைந்து விடுவார்.

ராஜ கோபுரம்

Srirangam Raja Gopuarm 1868
Srirangam Raja Gopuarm _1868
விஜயநகர மன்னர்கள் வரிசையில் வந்த அச்சுதராயன் (1530-1542)  எனும் மன்னனால் முற்று பெறாத நிலையில் முதல் நிலையிலேயே நிறுத்தப்பட்டது இந்த ஆலயத்தின் ராஜகோபுரமாகும்.  1979ம் ஆண்டு வரை ஏறத்தாழ 430 ஆண்டுகளாக மொட்டை கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.



Srirangam Raja Gopuram _1890 Photos
Srirangam Raja Gopuram _1890
மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு கோபுரம் 13 நிலைகளுடன் கூடிய ஒரு முழுமையான கோபுரமாக மாநில அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிகய தீந்திர மகா தேசிகன் ஜீயர் சுவாமிகளால் அவருடைய  நேரடி பார்வையில் நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

Srirangam Raja Gopuram Old Photography
Srirangam Raja Gopuram Old Photo
இது நாள் வரையில் நம் நாட்டில் 11 நிலைகள் உள்ள கோபுர ஆலயங்கள் தான் இருக்கின்றன, இதுவும் சில ஆலயங்கள்தான் திருவண்ணாமலை, திருகோவலூர், ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆகிய ஆலயங்கள் தான்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது. இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான். தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட) உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.

கோபுர உச்சியில் 13 செப்பு கலசங்கள் அலங்கரிக்கின்றன. கோபுர திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு 25-03-1987ம் நாள் இந்திய குடியரசு துணைத்தலைவர், மாநில ஆளுனர், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பிரமுகர்கள் மற்றும் பலர் முன்னிலையில் நடந்தது. திருவரங்கம் அதற்கு இரண்டு தினங்களாக விழாக்கோலம் பூண்டதையாரும் மறக்க இயலாது. இது பொழுது பல நிறுவனங்கள் பொது மக்களுக்கு அன்னதானம் செய்தது. பல ஆன்மிக சொற்பொழிவுகளும் நடந்தன. 

இந்த ராஜ கோபுர திருப்பணியினால் ஸ்ரீமத் அகோபில மடம் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கம் ஆலய வரலாற்றில் நீங்கா இடம் பெற்று விட்டார்கள் எனக் கூறினர். அதுதான் உண்மை. மன்னர்கள் செய்யாததை மட அதிபதி (முனிவர்) நன்கொடையிலேயே சிறப்பான  முறையில் செய்து விட்டார்கள்.

இனி சுற்று கோபுரத்திற்கு அழகு சேர்க்கும் 13 கலசங்கள் பற்றி சிறிது அநுபவிப்போம். இவைகள் ஒவ்வொன்றும் தாமிர உலோகத்திலானது. 6 பகுதிகளைக் கொண்டு இணைக்கப்பட்டு.  10.5 அடி உயரம் கொண்டது. இக்கலசங்கள் நன் கொடையாக கும்பகோணம் “திருப்பணித்திலகம்” திருவாளர் S.R.G.  ரெங்கனாதான் அவர்களும் திருமதி லஷ்மி அம்மாள் அவர்களும் வழங்கியுள்ளார்கள். இவர்கள் பெயர்களில் தான் எவ்வளவு பொருத்தம். அருள்மிகு ரெங்கநாதரையும், தாயாரையும் நினைவுப்படுத்துகிறது. இதனால் இவர்களும் ராஜகோபுர நிர்மான வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்று விட்டார்கள். கல்வெட்டுகளின் வாயிலாக இவர்களைப் போல் மற்ற திருப்பணி நன்கொடையாளர்களையும் அறியலாம். இக்கல்வெட்டுக்கள் அனைத்தும்  (எண்பத்து {80} கல்வெட்டுக்கள்) ராஜகோபுர அடித்தளத்தில் பதிக்கப் பெற்றுள்ளன. யாவரும் காணலாம்.

இத் திருப்பணிக்கு எவ்வளவு பொருத்தம் சற்று சிந்திப்போம்:-
ராஜகோபுரம் நிர்மானிக்க மனதில் நினைத்தவர் காஞ்சி பரமாச்சாரியார் சுவாமிகள் (சைவம்) திருவரங்கம் ஜீயர் சுவாமிகள் கனவில் தோன்றி இப்பணியினை முடிக்க ஒப்பு கொண்டதும் (இவர் வடகலையார்) இப்பணியிணை செயலாற்றிய செயல் வீரர் ஸ்தபதியார் திரு M.S. சிவப்பிரகாசம் அவர்கள் (சைவம்)  நெற்றியில் விபூதி இல்லாமல் காணமுடியாது.  இப்பணிக்கு நன்கொடையாளர்கள் சர்வமதத்தினர் என்று தெரிந்து மகிழ்வோமாக. கோவில் தென்கலை சம்பிரதாயம் என்பதனை அறிக. திருப்பணியில் முகலாயரும் {முஸ்லீம்களும்} உண்டு.

கலசங்கள்:-
ஒவ்வொன்றின் உயரம் 10.5 அடி, விட்டம் 5 அடி. எடை 135kg, இக்கலசங்களுக்குள்ளும் 1 அடி விட்டமும் 16 அடி உயரமும் உள்ள தேக்கு மர உருட்டுகள் நடப்பட்டு (இவை யோக தண்டு எனப்படும்) இவைகளைச் சுற்றி கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன (இக்கலசங்கள் ஆறு பாகங்களைக் கொண்டது கழற்றி மாட்டி விடலாம்) இடைவெளியில் மொத்தத்தில் சுமார் 100 மூட்டை வரகு தானியம் நிறப்பப்பட்டுள்ளன. கோபுரத்தின் உச்சியில் மூன்று இடி தாங்கிகள் பொருத்தப்பட்டன. இக்கலசங்கள் வரை செல்ல படிகள் உள்ளன. மொத்ததில் இந்த ராஜ கோபுரத்திருப்பணிக்கு செலவிடப்பட்ட நிதியின் மதிப்பு 1,46,36,000 ரூபாய் ஆகும். அதாவது ஒரு1 கோடியே 46 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்கள் என்று அறியப்படுகிறது. ஒரு பிரம்மாண்ட  திருப்பணி நிறைவுற்றது.

இந்த மொட்டக் கோபுரம் அன்றைய வரைப்படம் மூலம் (plan) கட்டப்பட்டிருந்தால் இதன் உயரம் சுமார் 300 அடியை எட்டும். காஞ்சி முனிவர் {காஞ்சி பரமாச்சாரியார் சுவாமிகள்} இது மொட்டை கோபுரமாக இருக்கிறதே என மனம் நொந்தார். அகோபில மடம் ஜீயர் கனவில் ரெங்கநாதர் ராஜகோபுரப் பணியை மேற்கொள்ள ஆக்ஞையிட்டார்.

அரங்கன் இட்டப்பணியை ஆன்மிக அரசர் ஜீயர் சுவாமிகள் மேற்கொண்டு எட்டு ஆண்டுகளில் நிறைவேற்றி வைத்துள்ளார். ஆட்டுவார் ஆடவைத்தால் ஆடாதார் யாருளர் என்பது போல் ரெங்கநாதரின் திருவருள் என்று மகிழ்வோம். இக்கோபுர திருப்பணியினை நிர்மாணிக்க பொறுப்பு மேற்கொண்ட ஓர் அநுபமிக்க ஸ்தபதியார் திருவாளர் M.S  சிவபிரகாசம் அவர்கள். அரசு அங்கிகாரம் பெற்ற ஸ்தபதியார். திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இவருக்கு “சிற்பக்கலைப் பேரரசு என்ற பட்டத்தையும் தங்கப்பதக்கத்தையும் வழங்கியுள்ளார்கள். இவர் அநேக கேடயங்களும் தங்கப்பதக்கங்களும், பரிசுகளும் விலைமதிப்பற்ற பொன்னாடைகளாலும் போர்த்தி கெளரவிக்கப்பட்டுள்ளார். இதுபோல் அநேக  சிறிய, பெரிய கோபுர திருப்பணிகள் செய்த அநுபவமிக்க செயல்வீரர். இவரும் திருவரங்க ராஜகோபுர திருப்பணியின் வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்றவர்கள் வரிசையில் உள்ளவராகிறார். வாழ்க இவர்கள் பல்லாண்டு வளர்க இவர்கள் இறைத்தொண்டு.

ஸ்ரீ ரெங்க விமானம்

இது பிரணவாக்ருதி விமானம் எனப் பெயர் பெரும் ஓம் எனும் எழுத்து வடிவில் அமையப்பெற்றது. மேல்தளம் பொன்தகடுகள் வேயப்பட்டது. விமானத்தின் மேல் தாமரை இதழ்களுக்கு மத்தியில் 4 பொற்கலசங்கள் உள்ளன. இவை நான்கும் நான்கு வேதங்கள் எனச் சொல்லப்படுகிறது.

விமானத்தின் தெற்கு பக்கம் விச்வக்சேனர் சங்கு சக்கரத்துடன் சேனாதிபதியாக இருக்கிறார். சக்கரம் பக்கவாட்டில் சுழழுவது போல் அமைந்துள்ளது. பொன்மயமான காட்சி மேற்கில் அச்சுதன் வடக்கே கோபாலன் கிழக்கு பக்கம் அனந்தன் ஆகியோர் அலங்கரிக்கின்றனர். திருச்சுற்று 4 மூலைகளிலும் நாராயணர்,நாபிநளினர்,நாகசயனர், நரசிம்மர் அகியோர் விமானத்தை காவல் புரிகின்றனர்.

விச்வக்சேனர் சேனை முதலியார், படைத்தலைவர். உலகைக் காக்க எங்கும் செல்ல வல்ல படையை உடையவர். வைகுண்டத்தில் நித்தயசூரிகளில் ஒருவர், இவரே கணபதியுமாவார்.

இம்மாதிரியான பொன்கூரைகள் வேய்ந்த விமானங்கள் நம் நாட்டில் மிகக் குறைந்த ஆலயங்களே உள்ளன. உதாரணத்திற்கு திருவரங்கம் திருமலை, (ஆனந்த நிலைய விமானம்), சிதம்பரம் (நடராஜர் சந்நதி விமானம்)  

இந்த ரெங்கவிமானத்தை காண யாவரும் கட்டணம் செலுத்தி உயரமான இடத்திலிருந்து காண வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டார் முக்கியமாக காண விழைகின்றனர். சிலர் அருகில் இருந்தும் காணலாம்.

விழாநாட்கள் வாகன சேவைகளும்

முதல்நாள்;-
கொடியேற்றம் நடைபெரும் மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியாருடன் வீதி வலம் வருவார். பின் யாகசாலை சென்று திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறை சேர்தல்.

இரண்டாம்  நாள் :-
காலை வீதி வலம் வந்து உபயதார் மண்டபம் செல்வது. பின் கற்பக விருகூத்தில் புறப்பட்டு கண்ணாடு அறை சேர்தல்.

மூன்றாம் நாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு உபயதாரர் மண்டபம் அடைதல் பின் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு இரட்டை பிரபையில் வீதி வலம் உபயதார் மண்டபம் சேர்தல். பின்னர் மாலையில் ஆஞ்சநேயர் வாகனத்தில் புறப்பாடு வீதிவலம்.

 ஆறாம் நாள்:-
காலை ஹம்ஸ வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வந்து பின் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி உபயதார் மண்டபம் சேர்தல் பிறகு தோளுக்கினியனில் பட்டு யானை வாகன மண்டபம் சேர்ந்து யானை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருவார் உள் ஆண்டாள்  சந்நதியில் மாலை மற்றி கண்ணாடி அறையில் பொதுஜனசேவை மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியாருடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல் அளவு கண்டு வீதிவலம் வருதல் இரவு தாயார் சந்நதியில் திருமஞ்சனம் கண்டருளல். இந்த ஆலயத்தில் பெருமாளுடன் உபயநாச்சியாராக இருவரும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். மற்றைய ஆலயங்களில் நின்றகோலம்தான்.

எட்டாம் திருநாள்:-
காலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருதல் பின் ரெங்கவிலாச மண்டபம் அடைந்து மாலையில் தங்கக் குதிரை வகனதில் புறப்பட்டு வீதிவலம் வருதல் தேரடியில் வையாளிகண்டருளல் கண்ணாடி அரைசேர்தல் 

ஒன்பதாம் திருநாள்:

திருத்தேருக்குப் புறப்படுவது ஏதோற்சவம் முடிந்து பிறகு ரதம் சென்றபாதை சரியாக உள்ளதா என பார்ப்பதற்காக உலாவருவதாக ஒரு ஐதீகம் மேலே குறிப்பிட்ட ஒன்பது நாட்களும் சித்திரை மாதம் நடக்கும் ஏதோற்சவதிற்கு சம்பந்தப்பட்டது.

ஏகாதசி திருவிழா சமயம் முலவருக்கு விலைமதிப்பற்ற முத்துக்களால் வெல்வெட் துணியில் தயாரிக்கப்பட்ட முத்தங்கி சாத்தப்படும் இதணை செய்தளித்தவர் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர். முத்துக்கள் பதித்த மேலாடை முத்தாங்கியாகும்.

யானை-எம்மெருமானுக்கு ஒப்பிடு

மேலே நாம் ஆலயம் பற்றியும் தெரிந்து வந்தோம். இப்பொழுது இடையில் ஒரு விளக்கக்கட்டுரையைக் காண்போம் “யானையை பெருமானுக்கு ஒப்புநோக்குதல்”

முன்னுரையாக:- அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள். யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும் அவைகளில் சிலவற்றைக் நாமும் அனுபவிப்போம்.

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும். எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழியூழிதோறும் அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதம் என்னும்படியிருபான்.

2. யானையின் மீது ஏறவேண்டியவன் யானையின் காலைப்பற்றியே ஏறவேண்டும். எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவுர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேரவேண்டும்.

3. யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துகொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே, எம்பெருமானை கட்டுபடுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்தஸத்வமயனாய் பரம பவித்ரனாய் இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.

5.யானையைப் பிடிக்க வேனில் பெண்யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் . 

6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளிவிடும். எம்பெருமானும் “வேதம் வல்லார் துணைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்கிறபடியே பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரத்தருளான்.

7. யானையின் மொழி யானைப்பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள்போல்வார்க்கே தெரியும் (பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).

8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடிநூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும் எம்பெருமான் அமுது செய்து சேஷித்த  பிரசாதத்தாலே பலகோடி பக்தவர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.

9. யானைக்கு கை நீளம் எம்பெருமானு அலம்புரிந்த நெடுந்தடக்கையளிறே “நீண்ட அந்தக் கருமுகிலையெம்மாள் தன்னை.”(பெரிய திருமொழி 205-2)

10. யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிகாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.

11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை 

12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் பிரக்குருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழிசெய்கிறார்.

13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலாவரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.

14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே

இது போலவே இன்னும் பல உவமைப் பொருத்தங்கள் உள்ளன. தெரிந்து மகிழ்வோமாக. இதனைப் போன்றே பெருமாளை கடலுக்கும் முகிலுக்கும்(மேகத்திற்கும்)  ஒப்புமைகள் உண்டு என்பதறிந்து மகிழலாம். மேற்குறிப்பிட்ட விளக்கங்கள் யாவும் பெருமாள் கோவில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியரால் எளிய நடையில் எழுதப்பட்டதை ஆதாரமாகக் கொண்டது. இது 1936ம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும்.
இதற்கு ஆதாரமான மூன்றாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி பாசுரம் 2985ல் “சொன்னால் விரோத மீது” எனத் தொடங்கும் பாசுரத்தின் 4வது அடியில் வரும் “என்னாளை என்னப்பன் எம்பெருமாளுனனாகவே” என்பதில் என்னாளை என்ற சொல்லுக்கு வியாக்யானம் சொல்லுமிடத்து குறிப்பிட்டுள்ளதை மற்றவர்களும் அநுபவிக்க விழைகிறேன்.

பஞ்ச அரங்கங்கள்

கண்ணன் எழுந்தருளியிருக்கும் ஐந்து தலங்களையும் பஞ்ச கிருஷ்ண சேஷத்திரங்கள் என்று சொல்வதுண்டு. அது போன்று அரங்கன் எழுந்தருளியிருக்கும் ஐந்து இடங்களையும் பஞ்சரங்கள் எனக் குறிப்பிடுவதுண்டு.
அவை: ஸ்தூரி ரெங்கன் - ஆராவமுதன் குடந்தை
காவேரி ரெங்கன் -  திருவரங்கம்
பரிமள ரெங்கன் -திருவிந்தளுர்
கல்யாண ரெங்கன் - திருநகர்
ஹேம ரெங்கன்(செம்பொன் ரெங்கன்) – திருநாங்கூர்

இவற்றுடன் மைசூர் மாநிலத்தில் (தற்போது கர்நாடகம்) ஸ்ரீ ரெங்கபட்டிணத்தை பாலரங்கம் எனக் கூறி சிலர் பஞ்சரங்களில் ஓன்று எனக் கூறுகிறார்கள். இவர்களை சேவிப்போம். அவன் அருள்பெறுவோம். சேவித்தால் பஞ்சமாபாதகங்கள் விலகும் எனத் தெரிய வருகிறது.

பூஜைகள் நடப்பது எப்படி?

அறிவுப்புப் பலகையில் தெரிவித்திருப்பதும்
பகவானே திருவாய் மலர்ந்தருளியதாய் பகவத்சாஸ்திரம் என்னும் இந்த சாஸ்திரத்தை அளந்தாழ்வான் கருடாழ்வான் சேனேசன் பிரம்மன் இந்திரன் இவ்வைவருக்கும் பஞ்சாயுதாம்சர்களாக அவதரித்த ஔபகாயநர், சாண்டில்யர், பரத்வாஜர், கெளசிகர், மெளஞ்சியாயனர் எனும் ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து இரவுகளில் தன்னை ஆராதிக்க வேண்டிய தத்துவங்களை உபதேசித்தப்படியால் ஸ்ரீபஞ்சராத்ரம் என்றும் நான்கு வேதங்களின் தத்துவங்கள் அமைந்திருப்பதாலும் “மோஷாயநாய வைபந்த ஏத தந்யோந வித்யதே” என்கிறபடி மோஷத்திற்கு இதுதான் வழியானதாலும் “ ஏகாயநவேதம் என்னும் பெரும் பெயர் பெற்ற ஸ்ரீபஞ்சாத்ர ஆகம முறைப்படி ஆராதனாதிகளை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக  பெரிய பெருமாள் கண்டருளுகிறார். இப்படியே தினமும் பூசைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் இந்த அறிவிப்புகளை எல்லாம் படித்தால் கோவிலை பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.