சனி, 21 மார்ச், 2015

ராஜ கோபுரம்

Srirangam Raja Gopuarm 1868
Srirangam Raja Gopuarm _1868
விஜயநகர மன்னர்கள் வரிசையில் வந்த அச்சுதராயன் (1530-1542)  எனும் மன்னனால் முற்று பெறாத நிலையில் முதல் நிலையிலேயே நிறுத்தப்பட்டது இந்த ஆலயத்தின் ராஜகோபுரமாகும்.  1979ம் ஆண்டு வரை ஏறத்தாழ 430 ஆண்டுகளாக மொட்டை கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.



Srirangam Raja Gopuram _1890 Photos
Srirangam Raja Gopuram _1890
மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு கோபுரம் 13 நிலைகளுடன் கூடிய ஒரு முழுமையான கோபுரமாக மாநில அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிகய தீந்திர மகா தேசிகன் ஜீயர் சுவாமிகளால் அவருடைய  நேரடி பார்வையில் நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

Srirangam Raja Gopuram Old Photography
Srirangam Raja Gopuram Old Photo
இது நாள் வரையில் நம் நாட்டில் 11 நிலைகள் உள்ள கோபுர ஆலயங்கள் தான் இருக்கின்றன, இதுவும் சில ஆலயங்கள்தான் திருவண்ணாமலை, திருகோவலூர், ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆகிய ஆலயங்கள் தான்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது. இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான். தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட) உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.

கோபுர உச்சியில் 13 செப்பு கலசங்கள் அலங்கரிக்கின்றன. கோபுர திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு 25-03-1987ம் நாள் இந்திய குடியரசு துணைத்தலைவர், மாநில ஆளுனர், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பிரமுகர்கள் மற்றும் பலர் முன்னிலையில் நடந்தது. திருவரங்கம் அதற்கு இரண்டு தினங்களாக விழாக்கோலம் பூண்டதையாரும் மறக்க இயலாது. இது பொழுது பல நிறுவனங்கள் பொது மக்களுக்கு அன்னதானம் செய்தது. பல ஆன்மிக சொற்பொழிவுகளும் நடந்தன. 

இந்த ராஜ கோபுர திருப்பணியினால் ஸ்ரீமத் அகோபில மடம் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கம் ஆலய வரலாற்றில் நீங்கா இடம் பெற்று விட்டார்கள் எனக் கூறினர். அதுதான் உண்மை. மன்னர்கள் செய்யாததை மட அதிபதி (முனிவர்) நன்கொடையிலேயே சிறப்பான  முறையில் செய்து விட்டார்கள்.

இனி சுற்று கோபுரத்திற்கு அழகு சேர்க்கும் 13 கலசங்கள் பற்றி சிறிது அநுபவிப்போம். இவைகள் ஒவ்வொன்றும் தாமிர உலோகத்திலானது. 6 பகுதிகளைக் கொண்டு இணைக்கப்பட்டு.  10.5 அடி உயரம் கொண்டது. இக்கலசங்கள் நன் கொடையாக கும்பகோணம் “திருப்பணித்திலகம்” திருவாளர் S.R.G.  ரெங்கனாதான் அவர்களும் திருமதி லஷ்மி அம்மாள் அவர்களும் வழங்கியுள்ளார்கள். இவர்கள் பெயர்களில் தான் எவ்வளவு பொருத்தம். அருள்மிகு ரெங்கநாதரையும், தாயாரையும் நினைவுப்படுத்துகிறது. இதனால் இவர்களும் ராஜகோபுர நிர்மான வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்று விட்டார்கள். கல்வெட்டுகளின் வாயிலாக இவர்களைப் போல் மற்ற திருப்பணி நன்கொடையாளர்களையும் அறியலாம். இக்கல்வெட்டுக்கள் அனைத்தும்  (எண்பத்து {80} கல்வெட்டுக்கள்) ராஜகோபுர அடித்தளத்தில் பதிக்கப் பெற்றுள்ளன. யாவரும் காணலாம்.

இத் திருப்பணிக்கு எவ்வளவு பொருத்தம் சற்று சிந்திப்போம்:-
ராஜகோபுரம் நிர்மானிக்க மனதில் நினைத்தவர் காஞ்சி பரமாச்சாரியார் சுவாமிகள் (சைவம்) திருவரங்கம் ஜீயர் சுவாமிகள் கனவில் தோன்றி இப்பணியினை முடிக்க ஒப்பு கொண்டதும் (இவர் வடகலையார்) இப்பணியிணை செயலாற்றிய செயல் வீரர் ஸ்தபதியார் திரு M.S. சிவப்பிரகாசம் அவர்கள் (சைவம்)  நெற்றியில் விபூதி இல்லாமல் காணமுடியாது.  இப்பணிக்கு நன்கொடையாளர்கள் சர்வமதத்தினர் என்று தெரிந்து மகிழ்வோமாக. கோவில் தென்கலை சம்பிரதாயம் என்பதனை அறிக. திருப்பணியில் முகலாயரும் {முஸ்லீம்களும்} உண்டு.

கலசங்கள்:-
ஒவ்வொன்றின் உயரம் 10.5 அடி, விட்டம் 5 அடி. எடை 135kg, இக்கலசங்களுக்குள்ளும் 1 அடி விட்டமும் 16 அடி உயரமும் உள்ள தேக்கு மர உருட்டுகள் நடப்பட்டு (இவை யோக தண்டு எனப்படும்) இவைகளைச் சுற்றி கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன (இக்கலசங்கள் ஆறு பாகங்களைக் கொண்டது கழற்றி மாட்டி விடலாம்) இடைவெளியில் மொத்தத்தில் சுமார் 100 மூட்டை வரகு தானியம் நிறப்பப்பட்டுள்ளன. கோபுரத்தின் உச்சியில் மூன்று இடி தாங்கிகள் பொருத்தப்பட்டன. இக்கலசங்கள் வரை செல்ல படிகள் உள்ளன. மொத்ததில் இந்த ராஜ கோபுரத்திருப்பணிக்கு செலவிடப்பட்ட நிதியின் மதிப்பு 1,46,36,000 ரூபாய் ஆகும். அதாவது ஒரு1 கோடியே 46 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்கள் என்று அறியப்படுகிறது. ஒரு பிரம்மாண்ட  திருப்பணி நிறைவுற்றது.

இந்த மொட்டக் கோபுரம் அன்றைய வரைப்படம் மூலம் (plan) கட்டப்பட்டிருந்தால் இதன் உயரம் சுமார் 300 அடியை எட்டும். காஞ்சி முனிவர் {காஞ்சி பரமாச்சாரியார் சுவாமிகள்} இது மொட்டை கோபுரமாக இருக்கிறதே என மனம் நொந்தார். அகோபில மடம் ஜீயர் கனவில் ரெங்கநாதர் ராஜகோபுரப் பணியை மேற்கொள்ள ஆக்ஞையிட்டார்.

அரங்கன் இட்டப்பணியை ஆன்மிக அரசர் ஜீயர் சுவாமிகள் மேற்கொண்டு எட்டு ஆண்டுகளில் நிறைவேற்றி வைத்துள்ளார். ஆட்டுவார் ஆடவைத்தால் ஆடாதார் யாருளர் என்பது போல் ரெங்கநாதரின் திருவருள் என்று மகிழ்வோம். இக்கோபுர திருப்பணியினை நிர்மாணிக்க பொறுப்பு மேற்கொண்ட ஓர் அநுபமிக்க ஸ்தபதியார் திருவாளர் M.S  சிவபிரகாசம் அவர்கள். அரசு அங்கிகாரம் பெற்ற ஸ்தபதியார். திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இவருக்கு “சிற்பக்கலைப் பேரரசு என்ற பட்டத்தையும் தங்கப்பதக்கத்தையும் வழங்கியுள்ளார்கள். இவர் அநேக கேடயங்களும் தங்கப்பதக்கங்களும், பரிசுகளும் விலைமதிப்பற்ற பொன்னாடைகளாலும் போர்த்தி கெளரவிக்கப்பட்டுள்ளார். இதுபோல் அநேக  சிறிய, பெரிய கோபுர திருப்பணிகள் செய்த அநுபவமிக்க செயல்வீரர். இவரும் திருவரங்க ராஜகோபுர திருப்பணியின் வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்றவர்கள் வரிசையில் உள்ளவராகிறார். வாழ்க இவர்கள் பல்லாண்டு வளர்க இவர்கள் இறைத்தொண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக