சனி, 21 மார்ச், 2015

மாதவாரியாக விழாக்கள்

சித்திரை மாதம்:    விருப்பன் திருநாள் என்ற பெயரில் சித்திரை தேர்விழா. அது சமயம் சுற்று வட்டு கிராம மக்கள் பெருவாரியாகக் கூடி தேர் வடம் பிடித்து சில மணி நேரத்தில் தேர்நிலைக்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். அது சமயம் கோவிந்தா கோவிந்தா என்ற நாமம் முழங்கப்படுவதைக் கேட்கலாம். ரதோற்சவதற்கு முன் தினம் எம்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேரடியில் வையாளி , கோணவையாளி அதாவது குதிரை மிரண்டு தாறுமாறாக ஓடுவது போன்று நடை காண்பது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும். இம்மாதம் சித்ரா பௌர்ணமி அன்று பெருமாள் காவிரி அம்மா மண்டபம் படித்துறை அடைந்து திருமஞ்சனம் கண்டருளி கஜேந்திர மோஷம் நடக்கும்.

வைகாசி மாதம் :    வசந்தோற்சவம். 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். சக்கரத்தாழ்வார் சந்நதிக்கு வடக்கே உள்ள மண்டபத்தில் நடைபெறும்.

ஆனி மாதம்: ஜ்யேஷ்டாபிஷேகம். அன்றைய தினம் உற்சவர் அங்கி (பொன் அங்கி) கழற்றப்பட்டு ஆலய அதிகாரிகள் முன்னிலையில் சுத்தி செய்யப்பட்டு மறுபடியும் சாத்தப்படும். இது போல தாயார் சந்நதியிலும் ரெங்கநாயகி தாயார் அங்கியும் கழற்றப்பட்டு சுத்தி செய்யப்பட்டு சாத்தப்படும், பின்னர் வெவ்வேறு நாட்களில் 1008 கலசங்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து தனித்தனியே திருப்பாவாடை அன்று 1808படி அரிசி அளவில் சாதம் (அன்னம்) பொது ஜனங்களுக்கு விநியோகிக்கப்படும். இவ்வமுதில் பல் வகை பழங்களும் இடம் பெறுவது உண்டு.

அன்றைய தினம் மூலவருக்கு புணு சட்டம் சாத்தப்படும். தாயார் சந்நதியில் திருப்பாவாடை அன்று 1008 படி அரிசி அளவு சாதம் அமுது செய்விக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

ஆவணி மாதம்: இம்மாத சுக்லபஷ ஏகாதசியன்று பவித்ரோத்சவம். பவித்ரோத்சவ மண்டபத்தில் நடக்கும். மணி நூல்களாகக்கட்டி மந்திரங்களால் உருஏற்றி யாகபூசையில் வைத்து பெருமானுக்கு அணிவிக்கப்படுகிறது, அன்று அரங்கர் ஸ்ரீபண்டார மண்டபம் சென்று திருமஞ்சனம் கண்டருளுவார். மறுநாள் தெற்கு வீதி பாதாள கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் உரியடி விழா கொண்டாடப்படும்.


புரட்டாசி மாதம்: இம்மாதம் தாயார் சந்நதியில் நவராத்திரி உற்சவம் நடக்கும்(இது மகரநவமி விழா) நாள் முடிவில் கோவில் யானை நொண்டியடித்துக் கொண்டு “ரெங்கா ரெங்கா” எனப் பிளிரி ஆலய அதிகாரியிடமிருந்து பழங்கள் பெற்றுச் செல்வதைக் காணலாம்.
இம்மாதம் விஜயதசமி அன்று எம்பெருமான் காட்டழகிய சிங்கர் கோவில் சென்று மாலையில் வன்னிய அசுரனை சம்ஹாரம் செய்வதான ஐதீகத்தில் வன்னி மரத்தில் பெருமாள் அம்பு எய்வதைக் காணலாம்.
ஐப்பசி மாதம்: இம்மாதம் முதலிலிருந்தே தினமும் பொற்குடத்தில் திருமஞ்சனத்திற்கு காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது. சந்நதியில் இம்மாதம் பூராவும் பொற்கலசங்கள் தான் உபயோகத்திலிருக்கும். டோலோத்சவம் (ஊஞ்சல்) விழாவும் இம்மாதத்தில் தான் தீபாவளி நாளன்று அரங்கன் திருமஞ்சனம் கண்டருளி மாலையில் ஆழ்வார்களுக்கும் புத்தாடைகள் அளிப்பார். இம்மாதம் பூராவும் உற்சவர் சாளக்கிராமமாலை சாத்தியிருப்பார்.

கார்த்திகை மாதம்: இம்மாதம் சொக்கப்பனை கொளுத்துவது நடைபெறும் (சிவாலயங்களில் கார்த்திகை தீபம் சுடலை ஏற்றுவது என்பார்) குறிப்பிட்ட நாளில் கார்த்திகை கோபுரவாசலுக்கு முன்பு 20 அடி உயரத்திற்கு பனை ஓலைகள் கொண்டு சுடலை அமைத்து, அதைக் கொளுத்துபவர், வாய்கரிசி பெற்று தீ பந்தத்துடன் ஊடே சென்று மேலே நான்கு திசைகளிலும் தீ பற்ற வைத்துவிட்டு இறங்கி விடுவார். இதனை பெருமாள் அன்று நீலோத்பவமலர் மாலை அணிந்து பார்வையிடுவார். பின்னர் எம்பெருமான் கர்ப்பக்கிரகம் செல்லும் பொழுது கைத்தலமாக எடுத்துச் செல்லப்படுவார். திருக்கார்த்திகை நாளில் ஆலயம் பூராவும் ஆயிரக்கணக்கில் மாலையில் அகல் விளக்குகள் பிரகாசிப்பதைக் காணலாம்.

மார்கழி மாதம்: குளிர்காலம் 22 நாட்கள் விழா நடப்பதுண்டு நாலாயிர திவ்யபிரபந்தம் பூராவும் எம்பெருமானுக்கு முன்பு, அரையர்கள் சாற்றுவார்கள். இது இத்தலத்திக்கே உரிய தனிச்சிறப்பு சேவையாகும். அரையர் அபிநயம் காணவேண்டிய ஓன்று. அரையர் சேவை ஆரம்பம் முதல் முடிவு வரை காணவேண்டும். 
இவ்விழாவில் எம்பெருமான் 10ம் நாள் மோகினி அலங்காரம் காணக்கிடைக்கப் பெற்ற காட்சியாக அமையும். அன்று பெருமாள் சர்வ அலங்காரங்களுடன் பெண் உருவில் வெண்பட்டாடை உடுத்தி காட்சியளிப்பார். அதற்கு அடுத்த நாள் வைகுண்ட ஏகாதசி விழாநாள். அன்று விடியற்காலை எம்பெருமாள் நம்பெருமாளாக சொர்க்கவாசல் வழியாக கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக இடையில் அமைந்த மண்டபங்களில் நின்று அப்படியும் இப்படியும் அசைந்து சேவை சாதித்து ஆயிரங்கால் மண்டபம் அடைவார். இதற்கு முன் ஆயிரங்கால் மண்டப முன் அலங்காரக் கொட்டகையில் ஆழ்வார்களுக்கு சேவை சாதிப்பதும் பத்தி உலாவுவதும் நடக்கும்.
அன்று நம்பெருமாள் ரத்னங்கி அணிந்து மிகப்பிரகாசமாக காட்சியளிப்பார். நம்பெருமாளை முன்புரம் பார்த்து விட்டால் மற்றும் போதாது. பக்தர்கள் அவசியம் பின் அழகையும் கண்டு தரிசிக்க வேண்டும். முன்புரம் பெருமாள்மாலை அதாவது கிளி மாலை சாத்தியிருப்பார். பக்கத்திற்கு மூன்று கிளிகள் ஒய்யாரமாக அமர்ந்து பெருமாளை நோக்கிய வண்ணம் அமர்ந்திருப்பதைக் காணலாம். பக்தர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்து நீங்க மனமின்றி திரும்புவர். ஆனால் அக்கிளிகளோஅன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கும். அக்கிளிகளின் அமைப்பு மிக அழகாக பச்சை கலைகளினாலும் செவந்திபூவினால் வடிக்கப் பெற்றுள்ளதைக் காணலாம். மாலைகாரரின் கைவண்ணத்தை அங்கு காணலாம். இவைகள் கண் நிறைந்த காட்சியாக அமையும். கண்டவர் அநுபவிக்கலாம். பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற ஆவல் மேலிடும்.  விழா இறுதிநாள் ஆழ்வார் மோஷம். அன்று அதிகாலை திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள் முன்பு, சிறப்பாக தயாரிக்கப்பட்ட திண்பண்டங்களை அனைத்தும் வைக்கப்படும். பின்னர் நம்மாழ்வார் பெருமாள் திருவடி தொழுதல். இந்த விழா சமயம்     ம் நாள் நம்மாழ்வார் நாயகி கோலத்தில் அமர்ந்திருப்பார் சர்வ அலங்காரத்துடன் அணிமணிகள் துலங்க கிளிமாலையுடன் காணப்படுவார் இவருக்கு நம்பெருமாள் காணுவார்.


நடைபெறும் அது பொழ்து நம்மாழ்வார் ஆடை அணிகலங்கள் களையப்பெற்று நம்பெருமாள் திருவடிக்கீழ் சரண்புகுவது போல் கிடத்தப்படுவார். அவருக்கு அருள் பாவிப்பது போன்று துளவம் மாலை மலையாக சாத்தப்பெறும். இவையாவும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும். இதற்கு முன்தினம் நம்பெருமாளை தோளுக்கிளியனில் கண்டவர்கள் பிரதம பட்டர் சுவாமிகள் அவர்கள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு எல்லாருக்கும் சேவை சாதிப்பது சிறப்பு சேவையாகும் கைத்தல சேவை எனப்படும்.

தை மாதம்: பூபதி திருநாள் எனக் கூறுவதுண்டு. விழாவின் 9ம் நாள் தைத்தேர் உற்சவம் இது உத்திரவீதியில் நடைபெறும். தை மாதம் (ரதோத்ஸவம்) மூன்றாம் நாள் விழா சமயம் பெருமாள் காலை  தாயார் சன்னதிக்குக் கிழக்கே அமைந்துள்ள கருத்துரை மண்டபத்திற்கு எழுந்தருளுவார் சேவை நடக்கும். இதில் ஓர் விசேடம் பெருமானை சேர்ந்தாள் ரெங்கநாயகி தாயார் சென்று சேவிக்கும் பொழுது எதிரே பெருமானையும் அர்சித்திருந்தபடியே எதிர் எதிர் சேவிக்களாம் இதை  பட்டர் அறிவிக்கிறார்.  அடுத்தமாதம் பெருமானையும் தாயாரையும் சேர்த்து சேத்திமண்டபத்தில் சேவிக்களாம். இவ்விரு சேவைகளும் மனதிற்கு நிறைவையளிப்பவையாக  அமைவதாகும்.

மாசி மாதம்: நம்பெருமாளை தெப்பத்தில் வைத்து சுற்றி வரச் செய்து சேவை செய்யலாம் திரும்பும் சமயம் வழி நடை உபயங்களை கண்டருளி யதாஸ்தானம் சேர்வார்.
மறுநாள் மாலையில் பந்தக்காட்சி அநேக தீப்பந்தங்கள் தீவட்டிகள் கொளுத்தப்பட்டு அவைகளின் ஒளியில் நம்பெருமானை சேவிக்கலாம். இது சித்திரை வீதியில் உலா வருவார். 

பங்குனி மாதம்: ஆதி பிரம்மோத்சவம் எம்மாதம் ரெங்கநாதர் உறையூர் சென்று கமலவள்ளி நாச்சியாருடன் சேத்தியிலிருந்து பிறகு திருவரங்கம் அடைந்து ரெங்கநாயகி தாயாருடன் முரண்பாடு ஏற்பட்டு சமாதானமாகி சேத்தி இருந்து சேவை சாதித்து திருமஞ்சனம் கண்டருளி சித்திரை வீதியில் கோரதத்தில் உலாவருவார்.

விழாக்கள் மட்டுமல்லாமல் எல்லா நாளும் விழாநாளே எனக் கூறும்படி நடக்கும் இவ்விழாக்களில் பங்கு கொண்டு அவன் அருள் பெற்று உய்யவாருங்கள் அவன் காட்சி காணுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக