சனி, 21 மார்ச், 2015

யானை-எம்மெருமானுக்கு ஒப்பிடு

மேலே நாம் ஆலயம் பற்றியும் தெரிந்து வந்தோம். இப்பொழுது இடையில் ஒரு விளக்கக்கட்டுரையைக் காண்போம் “யானையை பெருமானுக்கு ஒப்புநோக்குதல்”

முன்னுரையாக:- அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள். யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும் அவைகளில் சிலவற்றைக் நாமும் அனுபவிப்போம்.

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும். எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழியூழிதோறும் அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதம் என்னும்படியிருபான்.

2. யானையின் மீது ஏறவேண்டியவன் யானையின் காலைப்பற்றியே ஏறவேண்டும். எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவுர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேரவேண்டும்.

3. யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துகொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே, எம்பெருமானை கட்டுபடுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்தஸத்வமயனாய் பரம பவித்ரனாய் இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.

5.யானையைப் பிடிக்க வேனில் பெண்யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் . 

6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளிவிடும். எம்பெருமானும் “வேதம் வல்லார் துணைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்கிறபடியே பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரத்தருளான்.

7. யானையின் மொழி யானைப்பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள்போல்வார்க்கே தெரியும் (பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).

8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடிநூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும் எம்பெருமான் அமுது செய்து சேஷித்த  பிரசாதத்தாலே பலகோடி பக்தவர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.

9. யானைக்கு கை நீளம் எம்பெருமானு அலம்புரிந்த நெடுந்தடக்கையளிறே “நீண்ட அந்தக் கருமுகிலையெம்மாள் தன்னை.”(பெரிய திருமொழி 205-2)

10. யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிகாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.

11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை 

12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் பிரக்குருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழிசெய்கிறார்.

13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலாவரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.

14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே

இது போலவே இன்னும் பல உவமைப் பொருத்தங்கள் உள்ளன. தெரிந்து மகிழ்வோமாக. இதனைப் போன்றே பெருமாளை கடலுக்கும் முகிலுக்கும்(மேகத்திற்கும்)  ஒப்புமைகள் உண்டு என்பதறிந்து மகிழலாம். மேற்குறிப்பிட்ட விளக்கங்கள் யாவும் பெருமாள் கோவில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியரால் எளிய நடையில் எழுதப்பட்டதை ஆதாரமாகக் கொண்டது. இது 1936ம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும்.
இதற்கு ஆதாரமான மூன்றாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி பாசுரம் 2985ல் “சொன்னால் விரோத மீது” எனத் தொடங்கும் பாசுரத்தின் 4வது அடியில் வரும் “என்னாளை என்னப்பன் எம்பெருமாளுனனாகவே” என்பதில் என்னாளை என்ற சொல்லுக்கு வியாக்யானம் சொல்லுமிடத்து குறிப்பிட்டுள்ளதை மற்றவர்களும் அநுபவிக்க விழைகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக