திங்கள், 2 மார்ச், 2015

ஸ்ரீரங்க தலபுராணம்

ஸ்ரீரங்க விமானம்
வைணவ இறை உணர்வு கொண்ட மக்களால் பெரிதும் போற்றப்படும் 108 வைணவ திவ்ய ஷேத்தரங்களில் ஒன்றானதும் முதன்மையானதும், தேவர்கள், முனிசிரேஷ்டர்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்களால் பூலோக வைகுண்டம் எனவும், பெரிய கோவில் எனவும் ஆராதிக்கப்பட்டு வந்த தலமான திருவரங்கம் பற்றி சிறிது அனுபவிப்போம்.

தலபுராணக் கதை

பகவான் மகாவிஷ்ணு மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள் எடுத்து தர்மத்தை நிலைநாட்டி பிரம்மாவிடம் வேதங்களை அளித்தார். இவ்வேதங்கள் அந்தந்த அவதாரகாலங்களில் பிரம்மாவிடம் இருந்து அசுரர்களால் பறிக்கப்பட்டன. அதன் பின்னர் பிரம்மா சத்யலோகத்தில் நிம்மதி இல்லாதிருந்தார். எனவே மீண்டும் மகாவிஷ்ணுவை பாற்கடலில் தரிசிப்பதற்கு வந்தார். அவருக்கு மகாவிஷ்ணு காட்சியளித்து ஒப்பு உயர்வற்ற அஷ்டாச்சர மந்திரத்தை “ஓம் நமோ நாராயணாய” என்னும் பதத்தை உபதேசித்தருளினார்.

பிரம்மன் அம்மந்திரத்தை உச்சரித்த வண்ணம் தவமிருந்தார். அதற்கு மெச்சி மகாவிஷ்ணு ஸ்ரீரங்கம் கர்பக்கிரகத்தின் மேலுள்ள விமானத்துடன் பூலோக வாசிகள் கண்டு பேரானந்தமடைந்தனர்.

இத்தருணத்தில் பிரம்மன் தவநிலை கலைந்து அரங்கனை விமானத்தினுள் கண்டு மனங்குளிர வழிப்பட்டார். அங்கே அரங்கனை வைகுண்டத்தில் காண்பது போன்று பேரானந்தத்தில் ஆழ்ந்தார். உடன்நினைத்தார், இவ்விமானம் சத்யலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டு நித்ய வழிபாட்டிற்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்று. இவ்வேட்கையினை அறிந்த அரங்கன் பிரம்மாவிற்கு அர்ச்சாவதார மகிமையை போதித்தார். இதனை பிறகு பார்ப்போம்.

அந்த மகிமை : பரமபதனின் மேன்மையும், ஷீராப்திநாதனின் சீர்மையும், விபவத்தின் நீர்மையுடனும் வாத்ஸல்யம் ஸெளலப்யம் ஆகிய தாய்ப்பாசம் அருங்குணங்களுடன் பூலோகத்தில் இருப்பதாகும். மேன்மை= சிறப்பு, பெருமை , சீர்மை=அழகு  ,நீர்மை = நற்குணம் , எளிமை ( Easy approachability)

பெருமாள் அர்ச்சாவதார நிலை கொண்ட ஷேத்திரங்கள் :
1. திருவரங்கம்
2. திருப்பதி
3. ஸ்ரீமுஷ்ணம்
4. நான்குநேரி (நெல்லை மாவட்டம்)
5. புஷ்கரம் (ராஜஸ்தான் மாநிலம்)
6. ஸாலக்கிராமம் (நேபால்)
7. நைமிசாரண்யம்
8. பத்ரிகாஷ்ரம்
ஆகிய எட்டு தலங்களாகும். 

மேற்குறிப்பிட்ட எட்டு ஷேத்திரங்களின் படங்களும் திருவரங்க ஆலய கிளி மண்டபத்தில் ஓவியமாகத் தீட்டப்பெற்றுள்ளன. இவர்ளுடன் தியாக மண்டலம் காஞ்சிபுரம் எனவும், ஞான மண்டலம் மேலக்கோட்டை எனவும், ஆக 10 ஷேத்திரங்கள் ஓவியத்தில் கண்டு சேவிக்கலாம். மேலும் அரங்கன் ரெங்க விமானம் சத்ய லோகத்தில் வ்ரஜா நதிக்கரையில் விஸ்வகர்மாவின் பேருதவியினால் ஸ்தாப்பிக்கப்பட்டு நித்யபூசைகளுடனும் விழாக்களுடனும் ஆராதிக்கப்பட்டு வருகிறது.


இதன் பின்னர் ஆராதனை புரிவது சூர்ய குல மன்னன் இஷவாகுலவினரிடம் அளிக்கப்படுகிறது. இதை மனதில் கொண்டு இஷ்வாகு குல மன்னன் தவமியிற்றி இந்திரனால் தடுக்கப்பட்டும்  பிரம்மாவினால் அவனுக்கு ரெங்கவிமானம் அளிக்கப்படுகிறது. இது சரயு நதிக்கரையில் ஸ்தாபிக்கப்பட்டு அவ்வரசகுல சந்ததியார்களால் பூஜிக்கப்பட்டு வந்தது. அவ்வழி மன்னர் தசரதன் அசுவமேதயாகம் நிகழ்த்தினார். அதற்கு தமிழ்நாட்டிலிருந்து தர்ம வர்ம சோழ அரசன் சென்றார். அங்கு அரங்கனைத் தரிசிக்கும் வாய்பைப் பெற்றார். அரங்கனைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்ல தவமியற்றினார். இதை கண்ணுற்ற ரிஷிகளும், முனிவர்களும் அவனிடம் அரங்கன் உனது நாட்டில் சதா சேவை சாதிக்க விருப்பம் கொண்டுள்ளார். எனவே தவத்தினை முடித்துக் கொள்ளுமாறு வேண்டினார்கள்.

இப்பெருந்தன்மையினை நினைத்து மகிழ்ந்து உறையூரில் (நிசுனாபுரி என்பது பழைய பெயர்) நித்ய வாசம் செய்வித்தான். இதுவே அரங்கன் பூலோகத்திற்கு வந்த விதம்.


வரலாற்று விபரம்:  ராம காதையில் ராவணவதம் முடிந்து ராமர் பட்டாபிஷேக காலத்தில் ராமருக்கு இலங்கைப் போரில் உதவியாக இருந்தவர்களுக்கு விலைமதிப்பற்ற பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். இந்த ரெங்க விமானம் சூர்ய குலவம்சத்தின் 37வது தலைமுறை வரை ஆராதிக்கப்பட்டதாகும். அது சமயம் விபீடணன் {விபீஷணன்} அரங்கனுடன் கூடிய ரெங்க விமானம் பெற்றார். இலங்கையில் பிரதிஷ்டை செய்ய எடுத்து வருகிறார். வழியில் திருவரங்கத்தில் சந்திரபுஷ்கரணிக்கரையில் இறக்கி சில நாட்கள் தங்கி பூசைகள் ஆராதனைகள் நிகழ்த்தி ஓர் நாள் எடுக்க முயன்று தோல்வி கண்டு மிக வருந்தினார். இதற்கு விளக்கம் இல்லை. இதனைக் கண்ட அரங்கன் விபீடணனிடம் இந்த அரங்கம், காவிரி கொள்ளிடத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இங்கு தான் நிரந்தர வாசம் செய்ய விருப்பம் கொண்டுள்ளதாகவும் மேலும் தான் தர்ம வர்ம சோழனுக்கு அவன்  தவத்திற்கு மெச்சி என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து அருள் பாவித்தேன். எனவே இங்கு நிரந்தர வாசம் செய்ய நிச்சயத்துவிட்ட படியால் நீ இலங்கைக்குச் செல் என்றும் உன்னை நான் என்றும் பார்த்துக் கொண்டிருப்பதற்காக தெற்கு நோக்கியே சாந்நித்தியம் கொண்டிருப்பதாகக் கூறி இங்கே தினமும் யாவர்க்கும் அருள் பாவித்துக் கொண்டிருக்கிறார்.

பின் பல ஆண்டுகளுக்குப்பிறகு திருவரங்கம் மண்மாறி பெய்து பூமியில் புதையுண்டது. ஒருநாள் சோழ அரசன் வேட்டைக்கு வந்த சமயம் ஓர் மரத்தடியில் இளைப்பாறிய சமயம் அம்மரத்திலிருந்த கிளி “திருவரங்கம் மண்ணில் புதையுண்டதை தெரிவித்தது அதைக்கேட்ட அரசன் பூமியைத் தோண்டி வெளிக்கொணர்ந்தான், இவன் கிளி கண்ட சோழன் என பெயர் பெற்று வழங்கப்படுகின்றான். இதுதான் நாம் யாவரும் போற்றி வணங்கும் திரு அரங்கன் ரெங்கநாதன் வரலாறு ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக